08 ஆகஸ்ட் 2015




குடிதாங்கிகள்....
-      பசு.கவுதமன்.


மிழ்நாட்டின் இன்றைய தலைப்பு செய்திகளுக்கு ‘ விஷயதானம் ’ செய்து கொண்டிருப் பவர்களில் முக்கியமானவர்கள், குறிப்பிடத்தக்கவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர், இராமதாஸ் அவர்களும், மற்றும் அவரது மகனும், 2016ஆம் ஆண்டின் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் வேட்பாளருமான மருத்துவர், அன்புமணி அவர்களும், ( இப்ப அந்த வடையும் போச்சு ) அவர்களைப் போன்ற அந்தக் கட்சியைச் சார்ந்த ‘ அறிவார்ந்த ’ பலரும், அவர்களோடு திராவிட ஒவ்வாமையால் கடுமையான பாதிப்புக்கு ஆளான தமிழ்தேசிய  ‘தம்ளர்களும்’ தான்! 
                                                
இவர்களுக்கு இருக்கின்ற பலமே - பொதுவாக அரசியல் ‘செய்பவர்களுக்கு’ - இருக்கின்ற பலமே, தமிழர்களின் இரண்டு தனிப்பட்ட குணங்கள்தான். அவையாதெனில், முதலாவது, எதையும் உடனடியாக, சுலபத்தில் மறந்துவிடுகின்ற பொதுப்புத்தி. அது நல்லதானாலும், கெட்டதானாலும் பொதுவான மறதி. ஆனால் தற்போது தமிழர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக அந்த ‘ அம்னீஷியா ’ விலிருந்து விடுபட்டு நடுவிலே கொஞ்சம் நினைக்கத் துவங்கி யுள்ளார்கள் என்பது ஆறுதல் தரக்கூடிய விசயம்.
இரண்டாவது, ‘பழக்கப்படுத்திக் கொள்வது’ என்பதைப் வழக்கமாக்கிக் கொண்டு பழகிக்கொள்வது. எந்த ஒன்றையும்"இல்லையா? சரிவிடு, பாத்துக்கலாம்"என்று பழகிக் கொள்கின்ற மனோபாவம். இந்த இரண்டு குணநலன்களுமேதான், தமிழ்ச் சமூகத்தின் சகலதளங்களிலும் அரசியல் ‘’ பன்னுகிறவர்களுக்கு ’’ பயன்படுகின்றது என்றால்  அது மிகையில்லை. இந்த பொதுபுத்திகளை மறக்காமல், அதன் அடிப்படையில் இதனை அசை போடவேண்டும்.






தோழர் திருமாவளவன் அவர்கள், தந்தி தொலைக்காட்சி செவ்வி ஒன்றில்  (30.12.2012) ஒரு செய்தியினை பதிவு செய்தார். மரு. இராமதாஸ் அவர்களுக்கு “ தமிழ் குடிதாங்கி ” என்ற பட்டத்தினை வழங்கியது தொடர்பாக, ஆனால் அதில் கூடுதலாக ஒரு செய்தியினை சொன்னார், “ வன்னிய பெண்கள் அவர் மீது மண்ணை வாறி இறைத்த பிறகும் எங்கள் தோழர்களுடன் நின்றார் ” என்பதாக! அந்த சம்பவம் உண்மைதான் ஆனால் அங்கே பெண்கள் கைகளில் இருந்தது மண்ணல்ல – தரையைக் கூட்டுகின்ற “ “விளக்கமாறு ” என்பதுதான் உண்மை! அதுமட்டுமல்ல, அவர்கள் மருத்துவரை நேருக்கு நேர் பேசியது எழுதமுடியாதது. ஆனாலும் அது பின்னால் வரும்.  அங்கே நடந்தது என்ன? குடிதாங்கிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் என்ன சம்பந்தம்? அதுமட்டுமல்ல, அவருடைய பாதுகாப்பு கருதி தோழர்கள் அவரை, அவர்களுடன் வைத்துக்கொண்டனர். சொந்த சாதி துரத்தி விட்டது என்பதும், காலனி மக்கள் அவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என்றதும், காவல்துறை இவர் இருந்தால் சட்டம் ஒழுங்கு கெடும். அவரை வெளியேற்றுங்கள் என்று சொன்னதும் உண்மை, உண்மை. பட்டம் வழங்கிய தோழர் திருமாவுக்கும், குடிதாங்கிக்கும் என்ன தொடர்பு? எப்போது தொடர்பு? தோழர் திருமா எப்போது குடிதாங்கிக்கு வந்தார்? அவர் ஏன் அந்தத் தமிழ் குடிதாங்கி பட்டத்தை மருத்துவர் ராமதாசுக்கு வழங்கினார்?  உண்மையில் யார் “ தமிழ் குடிதாங்கி ” ? என்பதை “ நோண்டி நொங்கெடுத்து ” சற்றேறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னால்  இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏன்? குடிதாங்கி நிகழ்வில்,
குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
நீலப்புலிகளின் நிறுவனர் உமர்பாரூக் என்ற டி.எம்.மணி
என்ற ஆளுமைகளின் செயல்பாடுகளும், களப்பணியும், பங்களிப்பும்
இதுவரை பதிவு செய்யப்படவில்லை. எனவேதான் நமக்குத் தெரியாத, வெளிவராத செய்திகள், மறைக்கப்பட்ட உண்மைகளை பதிவு செய்ய வேண்டிய வரலாற்று அவசியம் ஏற்பட்டது.
இது என்னுடைய முன்னுரையின் துவக்கம் மட்டுமே!
விரைவில் நூலாக…,
கீழைத்தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகளின் வீரெழுச்சியில் பெரியாரியக்கப் பங்களிப்பு என்ன என்பதை பதிவு செய்த ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் போல…,
குடிதாங்கியில் பெரியாரிக்கப் போராளிகளின் பங்களிப்பு என்ன?
விரைவில் தரவுகளாக…,
அதிலிருந்து சில…,
தோழர் செல்வராஜ் (குடிதாங்கி வழக்கின் இரண்டாவது குற்றவாளி – A2 )
சொல்கின்றார், 


" நேரடியா ராமதாஸ் வீட்லே போய் பேசியவன் நான். புதுசா காலனிக்காரங்க பிரச்ச னைய கிளப்புறாங்க. FMD ஊர் மேப் எடுத்துக்கிட்டுப் போனேன். விரங்களைச் சொல்லி இது அவுங்க இடம், நம்ம இடம் எங்க இருக்குன்னு விபரமா பேசினேன். அவர் எதுவும் சரியா பேசல,
எங்க தோட்டத்துக்குப் போனிங்களா?
தோட்டம் ஏது – அப்பஏது தோட்டம்!
அப்ப தைலாபுரம் தோட்டமில்லையா?
அப்ப ஏது தோட்டம். திண்டிவனம் வீட்ல உட்கார்ந்து வராண்டாவில் -  இதுபோல ஒரு பெஞ்சிலதான் உட்கார்ந்து பேசினேன். இதேபோல ஒரு வீடு. அதிலே ஒரு பக்கம் ஆஸ்பத்திரி. வீட்டுக்கு வந்திடுங்கன்னாரு பக்கத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போனோம்.
பண்ருட்டியார் சென்னையிலிருந்து வந்துகிட்டு இருக்கார். வந்துடுவாருன்னு காலை 10 ½ வரைக்கும் காக்க வச்சிட்டாரு. அவரு வரல, நாங்க விடிகாலை 5 ½ க்கு அவரு ஆஸ்பத் திரிக்குப் போயிட்டோம். ராமச்சந்திரன் வரல நாங்க திரும்பிட்டோம்.
ஒருவாரம் கழிச்சி சோழபுரம் மீட்டிங்கு இவர் – ராமதாஸ் – வந்துருக்காரு. வந்தவரு நேரா அவங்கத் தெருவுல ( காலனி தெரு ) நைட் 11 மணி வாக்கில போய் அவுங்ககிட்ட, எந்தப் பிரச்சனையும் இருக்கப்படாது. எதுவானாலும் எனக்கு போன் பண்ணுங்க நா வந்து தூக்கிட்டு வற்றேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு…. "
இன்னும் அவர் தொடர்ந்து பேசுவார்.


இப்போது தோழர், அண்ணன் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
" 120 வன்னியர் வீடுகள், 200 காலனி வீடுகள். முதலில் 120 வீடுகளிலும் பேசுகிறேன். ஆண்கள் ஒத்துக்கொள்கின்றார்கள். பெண்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எடுத்த உடன் முரண்படாமல் அடிக்கடி பேசத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பெண்களுக்கும் நம்பிக்கை வந்தது. அண்ணன் சொல்றாருன்னு சிலபேரும், தம்பி சொல்லுதுன்னு சிலபேரும் ஏத்துகிற கருத்து உடன்பாடு வந்துடிச்சி. நான் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கிற நெருக்கடியை பயன்படுத்திக் கொள்கிறேன்.
என்ன நெருக்கடி?
அவங்க கொடுத்த வழக்கிலே இவங்க ( வன்னியர்கள் ) 80 பேர் மேல வழக்கு,  அவங்க
(சேரித் தோழர்கள்) 30 பேர் மேல வழக்கு. ஆறு மாசம் இவங்ககிட்டேயும், அவங்க கிட்டேயும் தொடர்ந்து பேசுகிறேன். பி.சி.ஆர் கேஸ். கேஸ் நெருக்கடி முக்கிய காரணம். 15 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்ல போய் கையெழுத்துப் போடனும். ஒரு வருசமா இப்படி கையெழுத்துப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நெருக்கடியை நான் பயன்படுத்தினேன். தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்லே போய் அவங்க கூட நின்னு கிட்டு நீ 80 பேரு 15 நாளைக்கு ஒருதடவ வற்றதுக்கு என்னாச்சி, நீ 30 பேரு உனக்கு என்னாச்சி? என்னாய்யா இது, உங்களுக்கு இது அசிங்கமாப்படலயா? இப்படிப் பேசிப் பேசியே இரண்டுபேரையும் ஒன்னா வச்சி காபி, டீ குடிக்க வச்சி , இப்படியான நடவடிக்கை ஆரம்பிச்ச பிறகுதான் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர்களை நம்முடைய இடத்திற்கு வரச்சொல்லி பேச ஆரம்பிச்சேன். அப்பறம் நாம மட்டும் இதிலே நின்னு பேசிடக்கூடாது என்று, டி.எம். மணியை உள்ளே கொண்டாந்து – அவர்கிட்டே நானே நேர்ல போய் சொன்னேன். அவர் உடனே, அண்ணே நான் வந்துடு றேன்னு சொல்ல அவரைக் கூட்டிக்கொண்டு முதல்ல வன்னியத் தெருவுக்குப் போய்ட்டு, இவங்கதெருவுக்கு வந்து ஒரு தேதிய FIX பன்னினோம்….."
அண்ணனும் தொடர்ந்து பேசுவார்.
இனி, அண்மையில் மறைந்த தோழர் டி.எம்.மணி…,


" 80 வன்னியர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு குடிதாங்கி சுடுகாட்டுச் சாலைப் பிரச்சனைக்கு முடிவு கண்ட பிறகு, சட்ட மன்ற உறுப்பினர்கள் குடந்தை ராமநாதன், போளூர் வரதன் போன்றவர்கள் சட்டமன்றத் தில் பா.ம.கவின் முகத்திரையை கிழித்தபிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுச்சாலை வழியே பிணத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிறகு, அரசியல் லாபம் கருதி பிரச்சனையை தான் முடித்ததாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடுதான் குடிதாங்கி வருகிறார் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சமூகப் பெண்கள் ராமதாசிடம் உங்கள் கட்சிக்காரர்கள்தானே மறித்தார்கள். இப்போது நீங்களே காட்டிக் கொடுப்பது போல சேரி மக்கள் பக்கம் சேருகிறீர்களே என்று கடுமையாக திட்டி, சேரிமக்களோடு அவர் வந்தால் மீண்டும் சாலையை மறிப்போம் என்றார்கள். நான்காண்டு காலம் போராடி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகண்ட எங்கள் மக்களும் ராமதாஸ் வருகையை விரும்ப வில்லை. DSP கந்தசாமியும், RTO பழனிவேலுவும் நீங்க இங்க இருக்காதீங்க, கலவரம் வரும்  போயிடுங்க என்று கட்டாயப்படுத்துகிறார்கள். நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கும்பகோணத்திற்கு அண்ணன் ஆர்.பி.எஸ். ஸ்டாலினோடு போனில் தொடர்பு கொள்கிறேன்…… "

  
நூலில் இன்னும் பேசுவார் மறைந்தத் தோழர் டி.எம்.மணி என்ற உமர்பாரூக்,
விரைவில் தமிழ் குடிதாங்கிகள்….!
                                                    அண்மையில் இந்த நூல் குறித்த செய்திகளை  பகிர்ந்து கொண்டபோது,                               



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக