24 டிசம்பர் 2014

பெரியாரை நினைப்போம்.....,

பெரியாரைப் போற்றுவோம்......!

 
பெரியாரைப் போற்றுவோம்,
ஆனால் அதற்கு முன்
கொஞ்சம் யோசிப்போம் !
எதை எழுதி... என்ன எழுதி
ஏனெனில் இங்கே
பெரியாருக்குப் பிறகு
போட்டது போட்டபடி
வைத்தது வைத்த இடத்தில்!
இதில் எதை எழுதி,
எதைச் சொல்லி.........

பெரியர் உடைபடுகிறார்,
பெரியார் உருவம் மாற்றபடுகிறார்,
பெரியர் ஏசப்படுகிறார்,
ஆனாலும்,

                                                                                                     பெரியார் பேசப்படுகின்றார்!

எனவே
 பெரியாரைப் போற்றுவோம்
அதற்கு முன் கொஞ்சம் பேசுவோம்!

முகங்களைத் தொலைத்து விட்டோம்
முகவரிகளைத் தேடுகின்றோம்!
பாதைகளை களவாடிய
கைகாட்டி மரங்களுக்கு
நித்தமும் நீர் பாய்ச்சுகின்றோம்!
வேரில்லா கொடிமரங்களுக் கீழே
தேரினை நிறுத்துகின்றோம்
புதிய பாரிகளாய்!
பெரியாரைப் போற்றுவோம்
அதற்கு முன்னால்
கொஞ்சம் பேசுவோம்!

ஆண்டுக்கு ஒருமுறை வருகின்ற
ஆகஸ்ட் 15 யைப் போலவே
அர்த்தமிழந்த செப்டம்பர் 17 !
செக்குமாடுகளுக்கு
இடமென்ன? வலமென்ன?
பெரியாருக்குப்  பிறகு
போட்டது போட்டபடி
வைத்தது வைத்த இடத்தில்!

விலக்கப்பட்டவர்கள்—விலகிவந்தவர்கள்,
துரத்தப்பட்டவர்கள்—தூர நின்றவர்கள்,
ஒதுக்கப்பட்டவர்கள்—ஒதுங்கிக்கொண்டவர்கள்,
மொத்த குத்தகை எடுத்து
முதலாளி ஆனவர்கள்,
இப்படியாக ஆளுக்கொரு தின்னையில்......
சுட்டபழம் வேண்டுமா?
சுடாதபழம் வேண்டுமா?
சத்தம் போட்டு விற்பனை!
 
 நான் பிறக்கும் முன்பே
தேவடியாள் மக்கள் நீங்கள்!
நான் பிறக்கும் முன்பே
சூத்திரர்கள் நீங்கள்!
நான் பிறக்கும் முன்பே
நாலாம் சாதி நீங்கள்!
நாளைக்கு சாகப்போகிறேன்,
உங்களை சூத்திரனாக விட்டு விட்டுத்தானே,
அப்பறம் என்ன என்னுடைய தொண்டு!
சொன்னவர் பெரியார்!
இது என்ன? ஆதங்கமா?
ஆத்திரமா? அறைகூவலா?
அவரின் மரனசாசணம்!

அந்த
நீடுதுயில் எழுப்பிய
நிமிர்ந்த நெஞ்சை
முள்ளோடு புதைத்தோம்!
முள்ளை எடுத்தோமாம்...,
ஆனாலும் இன்னும்
வழக்கும்,வம்பும்!

நீ,
சன்னியாசியாகக் கூட
சம்மதிக்காதச் சட்டம்
உன்னை அர்ச்சகனாக்க அவசரப்படுமா?
எனவே இன்னமும்
நாம் நாலாம் சாதி தான்!
சூத்திரர்கள் தான்!
தேவடியாள் மக்கள் தான்!
பெரியாருக்குப் பிறகும்
போட்டது போட்டபடி,
வைத்தது வைத்தபடி!

பெரியார் இன்னொரு
செய்தியும் சொன்னார்,
சாகப்போகும் கிழவன் சொல்கிறேன்,
எனக்குப் பின்னால் வரும்தலைமுறை
உங்களிடம் பணிவாய் பேசாது, கேட்காது! என்று
ஆனால்
என்ன நடந்தது? நடப்பது என்ன?

இலட்சியங்கள்... லட்சங்களால்
தீர்மாணிக்கப்பட்டன?
சிலைகள் வைக்கும் அவசரத்தில்
சிந்தனைகள் புதைக்கப்பட்டன?
தலைவர்களும், தத்துவங்களும்
தவனைமுறையில் நினைக்கப்பட்டனர்?
வீரம் சோரம் போயிற்று,
புரட்சி புடவையாயிற்று,
மொழி-இனம்-நாடு என்று
சங்காரமிட்டவர்கள்
கடல் வற்றட்டும்
கருவாடு தின்னலாம் என்ற
ஒற்றைக்கால் கொக்குகளாய்!
அய்யாவழியில் அயராது உழைத்து
ஒரு சுபயோக சுபதின வெள்ளியில்
உலக திரையரங்குகளில்
பச்சைக்கல் மோதிரத்தோடு
பெரியாராய், சத்தியராஜ்!
பாடமாக வேண்டிய பெரியார்
செல்லுலாய்டில் படமாகிப்போனார்!
வாழ்க பெரியார்!
பெரியாரைப் போற்றுவோம்,
அதற்கு முன்னால்
கொஞ்சம் பேசுவோம்!

பெரியாருக்குப் பிறகும்
போட்டது போட்டபடி,
வைத்தது வைத்த இடத்தில்?
ஆகவே பெரியார்
உடைபடுகிறார்- உருவம் மாற்றபடுகிறார்!
கொள்கையோடு கொஞ்சம்
கோபமேறி கூடினால்
எங்களுக்குத் தெரியாது,
அவர்கள் நாங்களில்லை!
அறிக்கை வருகிறது?
சப்புக் கொட்டி
சாப்பிடுகின்ற கூட்டத்தில்
உப்புப் போட்டு உண்ணுகிறவன் எவனும்
உன்னோடு இருக்க முடியாது?

பெரியார் உடைக்கப்பட்டாலும்,
பெரியார் உருவம் மாற்றப்பட்டாலும்,
பெரியார் ஏசப்பட்டாலும்,
பெரியார் பேசப்படுவார்,
பெரியார் தேவைப்படுவார்,
பெரியார் தேவைப்படுவார்!
ஏனெனில்
பெரியார் ஓர் சகாப்தம்!
பெரியார் தத்துவங்களின் மொத்தம்!
பெரியார் மக்கள் சமூக மருத்துவம்!
பெரியார் மொழிபெயர்த்தால் மனிதநேயம்!
ஆனாலும் இன்றைக்கு
பெரியார் தோண்டி எடுக்கப்பட
வேண்டிய கட்டாயம்!
யோசியுங்கள் நண்பர்களே,
குறைந்தபட்சம்
ஒரு சாதிக்காரனாக சாகாமல்
மனிதனாகாவாவது மரணிப்போமே
நாம்
மரணத்திற்கு முன்பாகவேனும்
மனிதர்களாக வேண்டும்!
என்ன செய்யலாம்?
யோசியுங்கள் நண்பர்களே!


குறிப்பு :   30.12.2006ல் திருச்சி,தமிழ்ச்சங்கத்தில்,தமிழ்ப்பேரவை சார்பாக நடைபெற்ற பெரியாரைப் போற்றுவோம் கருத்தரங்கில்  வாசிக்கப்பட்ட சிறப்புக் கவிதை
இதில் சேர்க்க வேறு  செய்திகள்  இருந்தாலும்  இதை, இப்போதும்  அப்படியே   மீள் பதிவு  செய்வதில்  தப்பில்லை  என்றே  தைரியமாய்  நம்புகிறேன்..
பசு.கவுதமன்.


05 ஜூன் 2014

முற்றுப்புள்ளி அல்ல. . .,






முற்றுப்புள்ளி அல்ல. . .,
                                                  -  பசு.கவுதமன்.


வரலாற்றில் சாக்ரடீசும், பெரியாரும் முற்றுப்புள்ளிகள் அல்ல. அவர்கள் கேள்விகளின்  துவக்கப்புள்ளிகள். கேள்விகள் எங்கு உருவாகின்றதோ அங்கே சுயமரியாதை கருக்கொள்கின்றது.
அன்மையில் மறைந்த சுயமரியாதை சுடரொளி, தோழர் பெரியார் சாக்ரடீசும் தன்னுடைய மறைவு என்ற முற்றுப்புள்ளியை, தோழர் கவிஞர் அறிவுமதி வழியே இன்றைய தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி என்ற துவக்கப்புள்ளியாய் மாறியுள்ளார் அல்லது மாற்றியுள்ளார் என்றே நம்புகிறேன்.
தோழர் பெரியார் சாக்ரடீஸ் திடலுக்குள்ளும், திடலுக்கு வெளியேயும் எல்லோரிடமும் தொடர்பிலிருந்த அன்புக்குரிய பண்பாளர். பல்வேறு பெரியாரியக்கப் பொறுப்பாளர்கள் அவர் மீது ஏதோ ஒரு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் அறிவேன். அவருடைய தந்தையார் அய்யா சாமி,திராவிடமணி அவர்களும், எனது தந்தையார், தஞ்சை ந.பசுபதியும் தோழமைக்குரிய நண்பர்கள். எனக்கும் அவருக்குமான தொடர்பு இரண்டுமுறை தொலைபேசியில் மட்டுமே. ஆனால் இன்றளவும் அவர் அனுப்பிய தந்தை பெரியாரின் புகைப்படம்தான் என் நூலின் முகப்பை அலங்கரித்துக் கொண்டுள்ளது. சொல்லவந்த செய்தி அதுவல்ல,

30.05.14 அன்று தோழர் பெரியார் சாக்ரடீசின் நினைவேந்தல் நிகழ்வு. அதிலே கவிஞர் அறிவுமதி அவர்கள்,” பெரியார் மடியிலிருந்து, தம்பி சாக்ரடீஸ் நினைவோடு ” என்று இன்றைய நிலையில் தமிழ்ச்சமூகத்தின் நிலை குறித்து, விடிவு குறித்து உரிமையுடன் ஒரு கேள்வியை துவக்கப்புள்ளியாய் ஆசிரியர் அவர்களிடம் முன் வைக்கின்றார். அதையே தோழர் சத்தியராஜ் அவர்களும் வழிமொழிகின்றார். இறுதியில் இரங்கலுரை ஆற்றிய ஆசிரியர் அவர்கள், தன்னுடைய முப்பத்தியாறு நிமிட உரையில் கடைசி பத்து நிமிடத்தில் ஏழு நிமிடங்கள் அதற்கான பதிலைச் சொல்கின்றார்.
மேடையிலும், எதிரேயும் எல்லோரும் கனத்த இதயத்தோடு, சோகம் கப்பிய முகங்களுடன் ஒரு இறுக்கமான சூழல். ஆசிரியரின் வார்த்தைகள் வலியோடு வந்து விழுகின்றன. சென்ற தேர்தல் முடிவுகள் நம்மை 1925 களில் கொண்டு போய் நிறுத்தியது. இந்தத் தேர்தல் 1917 களில் அல்லவா நம்மை கொண்டுபோய் சேர்த்திருக்கின்றது என்று நினைத்தாரோ என்னவோ தன்னுடைய பங்களிப்பு என்ன என்பதை பரிசீலித்தாரோ ஏதோ, கவிஞர் அறிவுமதி அவர்களையும், தோழர் சத்தியராஜ் அவர்களையும் முன்வைத்து தமிழ்ச் சமூகத்திற்கான பதிலாக உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொன்ன பதிலாகவே உணர முடிந்தது. அதனை அப்படியே,

" . . . . . பதில் சொல்லாமல் ஆசிரியர் முடித்துவிட்டாரே என்று நினைக்கக் கூடாது, அதற்காக சொல்கின்றேன்.
பெரியார் திடல் என்பது இருக்கிறதே இது யாருக்கும் தனிப்பட்டவர்களுக்கு உரியதல்ல. இந்தத் திடல் எப்போதும் திறந்திருக்கின்ற திடல். இது ஒரு பொது அமைப்பு.
எங்களைப் பொருத்தவரையிலே நாம் ஒரே கோரிக்கைக்காக எதற்கு பத்துப் பன்னிரெண்டு அமைப்புகள், எதற்கு – அப்படியே அமைப்புகளோடு இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தலைமை, மற்றெதெல்லாம் இருக்கும் என்று நினைத்தாலுங்கூட தயவுசெய்து ஒரு கூட்டமைப்பாகவாவது அவர்கள் வரக்கூடிய அளவிற்கு வந்தால் இருகை நீட்டி வரவேற்பதற்கு என்றைக்கும் திராவிடர் கழகம் தயாராக இருக்கிறது. எங்களுக்கென்று தனியாக எதுவும் கிடையாது. நம்முடைய எதிரிகள் – பொது எதிரிகள் யார்? இதை மட்டும் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் அய்யா அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் அற்புதமான பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக நாம் பல கருத்துள்ளவர்களைப் பார்க்கும்போது – இந்த அரங்கத்திலே கூட இருக்கின்றார்கள். பல கருத்துள்ளவர்களைப் பார்க்கின்ற நேரத்திலே,  எது நம்மை இணைக்கின்றது என்பதுதான் முக்கியமே தவிர எது நம்மை பிரிக்கிறது என்று பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இணைப்பதை அகலப்படுத்துவோம், பிரிப்பதை அலட்சியப்படுத்துவோம் இதுதான் நம்முடைய அனுகுமுறை.
இந்த அனுகுமுறையை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் கெட்டிக்காரத்தனமாக மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், காலங்காலமாக – ராமாயண காலத்திலிருந்து இன்று வரையிலே என்ன நடந்திருக்கிறது, விபீஷணர்கள் ஆழ்வார்களாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பெருமை. அப்படிப்பட்ட அந்த காலகட்டம் இருக்கிறபோது செய்வதற்கு என்றைக்கும் தயாராக இருக்கின்றாம்.
சாக்ரடீஸ் போன்ற இளைஞர்கள் இன்றைக்கு ஏராளமாக உருவாகிக் கொண்டிருக் கின்றார்கள். இது ஒரு நாற்றாங்கால். இந்த நாற்றாங்காலிலே நம்மை அறியாமல் ஒரு சுனாமியோ – ஒரு வெள்ளத்தினாலோ – ஒரு புயலினாலோ – ஒரு சுறாவளி யினாலோ அந்தப் பயிர் அங்கே ஒருமுறை அழிந்துவிட்டது என்று சொன்னால் நிலம் பத்திரமாக இருக்கிறது. விதைகள் பக்குவப்பட்ட பண்ணைகள் இருக்கின்றன. எனவே அதோடு முடிந்துவிட்டது என்று யாரும் – எதிரிகள் உட்பட தயவு செய்து கணக்குப் போட்டுவிடக்கூடாது. அதற்கு இடம் தரமாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிலே, அன்றைக்கு நான் எழுதிய செய்தியில் ஆயிரமாயிரம் சாக்ரடீஸ்களை நாங்கள் உருவாக்குவோம் என்ற அந்தத் துணிவு இருக்கிறதே அந்தத் துணிவைத்தான் நாம் ஆறுதலாகப் பெறவேண்டும். . . . "
இதுதான் ஆசிரியர் அவர்கள் பேசியது,

இந்த செய்தி ‘ விடுதலை ’ ( 31.05.2014 ) யில், கடைசி பக்கத்தில்,

“ இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும், நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அதுபற்றி நான் கருத்துச் சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் பதில் சொல்லாமல் போய்விட்டாரே! என்று கருதிட இடம் கொடுக்கக்கூடாதல்லவா!

பெரியார் திடல் என்பது எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் சொந்தமானதல்ல; என்றைக்கும் திறந்தே இருக்கிறது; யாரும் வரலாம்! நான் அடிக்கடி சொல்லுவதுண்டு; அதையே திரும்பவும் சொல்கிறேன். நம்மை எது இணைக்கிறதோ அதனை விரிவு செய்வோம் - எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப் படுத்துவோம் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், சாக்ரட்டீசின் நினைவைப் போற்றும் வகையில் ஆக்கப்பூர்வமாக சிலவற்றைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். ” என்று வெளியிடப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான ஏட்டில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பேசிய பேச்சு ஒரு மூன்றாவது நபர் பேசியதுபோல வெளியிடப்பட்டுள்ளது என்றால் இது யாருடைய உள்ளக்கிடக்கை.
"எங்களைப் பொருத்தவரையிலே நாம் ஒரே கோரிக்கைக்காக எதற்கு பத்துப் பன்னிரெண்டு அமைப்புகள், எதற்கு – அப்படியே அமைப்புகளோடு இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தலைமை, மற்றெதெல்லாம் இருக்கும் என்று நினைத்தாலுங்கூட தயவுசெய்து ஒரு கூட்டமைப்பாகவாவது அவர்கள் வரக்கூடிய அளவிற்கு வந்தால் இருகை நீட்டி வரவேற்பதற்கு என்றைக்கும் திராவிடர் கழகம் தயாராக இருக்கிறது." இது ஆசிரியர் சொன்னதுதானே?
இத்தனை ஆண்டு காலங்களில் ஆசிரியரிடமிருந்து இப்படி ஒரு பதில் வந்த தில்லை. தேவை இருந்த காலங்களில் கூட. ஆனால் இன்றைய தேவையின் அவசியம், அவசரம் கருதி தமிழ்ச் சமூகத்தின் கையறுநிலை கருதி, வலிமிகுந்து ஆசிரியர் அவர்களிடமிருந்து வந்த பதில் அது. அதன் உண்மைத்தன்மையினை ஏன் விடுதலை மறைக்கின்றது. பெரியார் வலைக்காட்சியின் காணொளி காட்சிகள் சாட்சியங்கள் சொல்கின்றனவே! இதற்கு யார் பொறுப்பு அல்லது யார் விளக்கமளிப்பார்கள்? விடுதலை ஏனோ மறைக்கின்ற காரணத்தினால், ஜூனியர் விகடன் ( 08.06.14 ) எப்படி திரிக்கின்றது பாருங்கள்,
“ பெரியார் திடலும் இந்த இயக்கமும் யாருக்கும் தனி உரிமை அல்ல. பெரியார் திடல் திறந்துதான் இருக்கிறது. யாரும் வருவதற்கு நாங்கள் தடை போடவில்லை. தாய் கழகத்துடன் இணைந்து பணியாற்ற அணைவரையும் அழைக்கின்றேன் “ என்று சொன்னார் என்று எழுதிவிட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம் என்று எழுதுகின்றது.
விடுதலையே வெளிப்படைத்தன்மையில் இல்லாதபோது முயற்சிகள் எப்படி முன்மொழியப்படும். ஆனால் , நான் இந்த கட்டுரையினை எழுதும் முன்பாக பல பெரியாரியக்கத் தோழர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் பேசியபோது அவர்கள் யாவரும் கூட்டமைப்பு என்ற ஒருங்கிணைப்பு இன்றைய அவசிய தேவை என்பதை உணர்ந்தவர்களாவே உள்ளார்கள்.
ஆசிரியர் அவர்கள் சொன்னதுபோல, இது நாற்றாங்கால். பதப்படுத்தப்பட்ட விதைகள் பல்வேறு பண்ணைகளில், நிலம் அழிந்துவிடவில்லை பத்திரமாக இருக்கிறது. எதிரிகள் உட்பட யாரும் தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இந்த உண்மையினை முதலில் விடுதலை வெளியிட வேண்டும். அப்போதுதான் பயிரின் உயிர்ப்பு பலருக்கும் புரியும், தெரியும். ஆசிரியர் அழைக்கட்டும், நம்மிடம் இருப்பதும், நமக்குள் இருப்பதும் பகை முரண் அல்ல – நட்பு முரண்தான்.
விவாதிப்போம், விமர்சிப்போம். இதை ஒரு துவக்கப்புள்ளியாகக் கொள்வோம். நாம் என்றைக்கும் முற்றுப் புள்ளிகள் அல்ல.