24 டிசம்பர் 2014

பெரியாரை நினைப்போம்.....,

பெரியாரைப் போற்றுவோம்......!

 
பெரியாரைப் போற்றுவோம்,
ஆனால் அதற்கு முன்
கொஞ்சம் யோசிப்போம் !
எதை எழுதி... என்ன எழுதி
ஏனெனில் இங்கே
பெரியாருக்குப் பிறகு
போட்டது போட்டபடி
வைத்தது வைத்த இடத்தில்!
இதில் எதை எழுதி,
எதைச் சொல்லி.........

பெரியர் உடைபடுகிறார்,
பெரியார் உருவம் மாற்றபடுகிறார்,
பெரியர் ஏசப்படுகிறார்,
ஆனாலும்,

                                                                                                     பெரியார் பேசப்படுகின்றார்!

எனவே
 பெரியாரைப் போற்றுவோம்
அதற்கு முன் கொஞ்சம் பேசுவோம்!

முகங்களைத் தொலைத்து விட்டோம்
முகவரிகளைத் தேடுகின்றோம்!
பாதைகளை களவாடிய
கைகாட்டி மரங்களுக்கு
நித்தமும் நீர் பாய்ச்சுகின்றோம்!
வேரில்லா கொடிமரங்களுக் கீழே
தேரினை நிறுத்துகின்றோம்
புதிய பாரிகளாய்!
பெரியாரைப் போற்றுவோம்
அதற்கு முன்னால்
கொஞ்சம் பேசுவோம்!

ஆண்டுக்கு ஒருமுறை வருகின்ற
ஆகஸ்ட் 15 யைப் போலவே
அர்த்தமிழந்த செப்டம்பர் 17 !
செக்குமாடுகளுக்கு
இடமென்ன? வலமென்ன?
பெரியாருக்குப்  பிறகு
போட்டது போட்டபடி
வைத்தது வைத்த இடத்தில்!

விலக்கப்பட்டவர்கள்—விலகிவந்தவர்கள்,
துரத்தப்பட்டவர்கள்—தூர நின்றவர்கள்,
ஒதுக்கப்பட்டவர்கள்—ஒதுங்கிக்கொண்டவர்கள்,
மொத்த குத்தகை எடுத்து
முதலாளி ஆனவர்கள்,
இப்படியாக ஆளுக்கொரு தின்னையில்......
சுட்டபழம் வேண்டுமா?
சுடாதபழம் வேண்டுமா?
சத்தம் போட்டு விற்பனை!
 
 நான் பிறக்கும் முன்பே
தேவடியாள் மக்கள் நீங்கள்!
நான் பிறக்கும் முன்பே
சூத்திரர்கள் நீங்கள்!
நான் பிறக்கும் முன்பே
நாலாம் சாதி நீங்கள்!
நாளைக்கு சாகப்போகிறேன்,
உங்களை சூத்திரனாக விட்டு விட்டுத்தானே,
அப்பறம் என்ன என்னுடைய தொண்டு!
சொன்னவர் பெரியார்!
இது என்ன? ஆதங்கமா?
ஆத்திரமா? அறைகூவலா?
அவரின் மரனசாசணம்!

அந்த
நீடுதுயில் எழுப்பிய
நிமிர்ந்த நெஞ்சை
முள்ளோடு புதைத்தோம்!
முள்ளை எடுத்தோமாம்...,
ஆனாலும் இன்னும்
வழக்கும்,வம்பும்!

நீ,
சன்னியாசியாகக் கூட
சம்மதிக்காதச் சட்டம்
உன்னை அர்ச்சகனாக்க அவசரப்படுமா?
எனவே இன்னமும்
நாம் நாலாம் சாதி தான்!
சூத்திரர்கள் தான்!
தேவடியாள் மக்கள் தான்!
பெரியாருக்குப் பிறகும்
போட்டது போட்டபடி,
வைத்தது வைத்தபடி!

பெரியார் இன்னொரு
செய்தியும் சொன்னார்,
சாகப்போகும் கிழவன் சொல்கிறேன்,
எனக்குப் பின்னால் வரும்தலைமுறை
உங்களிடம் பணிவாய் பேசாது, கேட்காது! என்று
ஆனால்
என்ன நடந்தது? நடப்பது என்ன?

இலட்சியங்கள்... லட்சங்களால்
தீர்மாணிக்கப்பட்டன?
சிலைகள் வைக்கும் அவசரத்தில்
சிந்தனைகள் புதைக்கப்பட்டன?
தலைவர்களும், தத்துவங்களும்
தவனைமுறையில் நினைக்கப்பட்டனர்?
வீரம் சோரம் போயிற்று,
புரட்சி புடவையாயிற்று,
மொழி-இனம்-நாடு என்று
சங்காரமிட்டவர்கள்
கடல் வற்றட்டும்
கருவாடு தின்னலாம் என்ற
ஒற்றைக்கால் கொக்குகளாய்!
அய்யாவழியில் அயராது உழைத்து
ஒரு சுபயோக சுபதின வெள்ளியில்
உலக திரையரங்குகளில்
பச்சைக்கல் மோதிரத்தோடு
பெரியாராய், சத்தியராஜ்!
பாடமாக வேண்டிய பெரியார்
செல்லுலாய்டில் படமாகிப்போனார்!
வாழ்க பெரியார்!
பெரியாரைப் போற்றுவோம்,
அதற்கு முன்னால்
கொஞ்சம் பேசுவோம்!

பெரியாருக்குப் பிறகும்
போட்டது போட்டபடி,
வைத்தது வைத்த இடத்தில்?
ஆகவே பெரியார்
உடைபடுகிறார்- உருவம் மாற்றபடுகிறார்!
கொள்கையோடு கொஞ்சம்
கோபமேறி கூடினால்
எங்களுக்குத் தெரியாது,
அவர்கள் நாங்களில்லை!
அறிக்கை வருகிறது?
சப்புக் கொட்டி
சாப்பிடுகின்ற கூட்டத்தில்
உப்புப் போட்டு உண்ணுகிறவன் எவனும்
உன்னோடு இருக்க முடியாது?

பெரியார் உடைக்கப்பட்டாலும்,
பெரியார் உருவம் மாற்றப்பட்டாலும்,
பெரியார் ஏசப்பட்டாலும்,
பெரியார் பேசப்படுவார்,
பெரியார் தேவைப்படுவார்,
பெரியார் தேவைப்படுவார்!
ஏனெனில்
பெரியார் ஓர் சகாப்தம்!
பெரியார் தத்துவங்களின் மொத்தம்!
பெரியார் மக்கள் சமூக மருத்துவம்!
பெரியார் மொழிபெயர்த்தால் மனிதநேயம்!
ஆனாலும் இன்றைக்கு
பெரியார் தோண்டி எடுக்கப்பட
வேண்டிய கட்டாயம்!
யோசியுங்கள் நண்பர்களே,
குறைந்தபட்சம்
ஒரு சாதிக்காரனாக சாகாமல்
மனிதனாகாவாவது மரணிப்போமே
நாம்
மரணத்திற்கு முன்பாகவேனும்
மனிதர்களாக வேண்டும்!
என்ன செய்யலாம்?
யோசியுங்கள் நண்பர்களே!


குறிப்பு :   30.12.2006ல் திருச்சி,தமிழ்ச்சங்கத்தில்,தமிழ்ப்பேரவை சார்பாக நடைபெற்ற பெரியாரைப் போற்றுவோம் கருத்தரங்கில்  வாசிக்கப்பட்ட சிறப்புக் கவிதை
இதில் சேர்க்க வேறு  செய்திகள்  இருந்தாலும்  இதை, இப்போதும்  அப்படியே   மீள் பதிவு  செய்வதில்  தப்பில்லை  என்றே  தைரியமாய்  நம்புகிறேன்..
பசு.கவுதமன்.