25 மே 2021

               நான் சொன்னால் உனக்கு ஏன்  கோபம் வருகிறது ... ?

                                                                       மற்றும்

                                                       பச்சைத் தீ ... !

                                                                         
                                           - பசு. கவுதமன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------



ன்னுடைய நூல்களின் இறுதி கட்டப் பணி இன்னும் முழுமையடையவில்லை. மீண்டும் பயணிக்க வேண்டியுள்ளது.  ஏறத்தாழ இறுதி கட்டத்தில் உள்ள   இரண்டு நூல்களும் முக்கியமான பதிவுகள். 
NCBH  வெளியீட உள்ள, “ நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகிறது ? “  என்ற மொழி, கலை,  இலக்கியம் பற்றிய பெரியாரிய தொகுப்பு. ஆறு தொகுதிகள், ஒவ்வொன்றும்  குறைந்தது 800 பக்கங்களிலிருந்து அதிகபட்சமாக 1200 பக்கங்களுக்குக் குறையாது.  அய்ந்தாண்டுகால  உழைப்பும்,  தேடலும் !  அதற்கே  ஒரு  நூல்  எழுதலாம்.
தந்தை பெரியார்  அவர்களின்  1925 லிருந்து  1973 வரைக்குமான  பதிவுகள்  உள்ளது உள்ளபடி.
90 விழுக்காடு பெரியாரவர்களின்  பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அப்படியே குறைக்காமல், சுருக்காமல்  மறுபதிவு செய்துள்ளேன். பெரியாரை, பெரியாராகப்  படிக்கவேண்டும் என்ற  என்னுடைய  பேரவாவின்  வெளிப்பாடு  இது.
2011 களின் இறுதியில் இந்நூலுக்கான பணிகளைத் துவக்கினேன் . 2013 களில் என்னுடைய வலது கண்பார்வை இழப்பும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் அதற்குப் பின்னால்  கண்களுக்கான ஓய்வும் , பயிற்சியும் இப்படியாக ஓராண்டு முழுவதும் எந்த பணியும் செய்ய இயலாத நிலையில் ஒரு நீண்ட இடைவெளி . இப்போதும் கூட அரை மணிநேரம்  படித்தாலோ , எழுதினாலோ  இரண்டு மணிநேரமாவது  கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டிய நிலையில் தான் உள்ளேன்.






2014 களின் துவக்கத்திலிருந்து தொடர்ச்சியான தேடல். நிறைய தோழர்களின் ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும். நன்றி சொல்ல தனியே ஒரு புத்தகமே போடலாம். சற்றேறக்குறைய A4 அளவில் 9000 பக்கங்களுக்கு மேல் ஒளியச்சு செய்யப்பட்டுவிட்டது. இன்னமும் தரவுகள் ஒளியச்சு செய்யப்பட்டுக் கொண்டுள்ளன.  இந்த நூல் உள்ளடக்கத்தில்  எப்படி அமையவேண்டும் என்பதில் ஒரு குழப்பமான  மனநிலை எனக்குள் இருந்தபோது , பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்த நான், அங்கு பேராசிரியர் பா. மதிவாணன்  அய்யா அவர்களோடு இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்ன செய்தி பளிச்சென்று ஒரு புள்ளியை வைத்தது , அந்தப் புள்ளியிலிருந்து கோட்டினை இழுத்து உருவத்தை வரையத் துவங்கினேன். அதற்குப் பின்னால் நாடகத்துறை பேராசிரியர் மு இராமசாமி அவர்கள் – கலகக்காரர் தோழர் பெரியா
ர் தான் -  ஒருமுறை என்  இல்லத்திற்கு  வந்திருந்தபோது  சில பயன் மிக்கக் கருத்துக்களை வழங்கினார். அதுபோலவே,  என் மரியாதைக்குரிய தோழர் , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பல அரிய குறிப்புகளை சொல்லி இன்னும்  ‘ கணம் ‘ சேர்த்தார். 



சென்னையிலிருந்து திரும்பியதும் நூலின் உள்ளடக்கத்தை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கியமான சில தோழர்களை அழைத்திருந்தேன். அவர்களில்  தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின்  மாநில பொதுச்செயலாளரும்,  சாகித்திய அகாடமியின் உறுப்பினரும், என் மரியாதைக்குரிய  பேராசிரியருமான அய்யா இரா. காமராசு அவர்களும்,  சிறந்த சமூக சிந்தனையாளரும், எழுத்தாளருமான தோழர் செ. சண்முகசுந்தரமும்,  சமூக, இலக்கிய உணர்வாளரும், சிறந்த தோழருமான பொறியாளர் செல்வபாண்டியன் அவர்களும் என்னோடு கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி நூலின் உள்ளடக்கத்தினை செழுமைப் படுத்தியுள்ளார்கள். நான் அனுப்பிக் கொண்டுள்ள அத்துணைப் பக்கங்களையும் பகுத்து தலைப்புகளின் கீழ் அடுக்கி நூலுக்கான இறுதி வடிவத்தினை  சென்னையில் இருந்து கொண்டு தோழமைக்குரிய எனது அன்பு மகள் அ.க. தென்றலும் , அன்பு மருமகன் கிறிஸ்டோபர் டொமினிக்கும்  அமைத்துக் கொண்டுள்ளார்கள்.
 NCBH ன் தோழமைக்குரிய என் இனிய நண்பர் சரவணன் அவர்கள் எந்த குறுக்கீடுமின்றி ,
” சிறப்பாக வர வேண்டும் “ என்ற அன்பு வேண்டுகோளுடன் ,
பொறுப்பாளர்கள், தோழர்கள் திரு சபாபதி அவர்களும், திரு குமார் அவர்களும் அவ்வப்போது என் இல்லத்திற்கு வந்து நலம் வினவி, நூலின் வளர்ச்சி அறிந்தும்,  
இடையில் இந்திய பொதுவுடைமை கட்சியினுடைய மாநில பொதுச்செயலாளரும் என் நட்புக்குரிய தோழருமான சி. மகேந்திரன் அவர்களின் விசாரிப்பும் ……,  
என் முழு உழைப்பும் விரைவில்  தமிழ் கூறும்  நல்லுலகத்திற்கு நூல் வடிவில்  ……. !







“ பச்சைத் தீ “  –  வெண்மணிப்பதிவுகள்.
“ ஏஜிகேயின் நினைவுகளும், நிகழ்வுகளும் “  பதிவின்  தொடர்ச்சியாக  வர உள்ள என்னுடைய  நூல்.
இது சம்பவங்களின் மீது கற்பனையை ஓடவிட்டு ,  காதலையும், மோதலையும் கட்டி இழுத்து வருகிற புனைவு அல்ல ! இது கலையுமல்ல , படைப்புமல்ல ? !
திராவிடர் இயக்க பெரியாரியர்களின் இரத்தமும் சதையுமான பங்களிப்புகள். இருட்டடிக்கப்பட்ட எங்கள் தோழர்களின் வலி மிகுந்த சோகங்களையும் , இழப்புகளையும் பதிவு செய்கிற வரலாற்று ஆவணம் .
கீழ்வெண்மணியின் , பின் தொடர்ச்சியாக  நடந்தேறிய நிகழ்வுகளில் மறைக்கப்பட்ட –  மறுக்கப்படுகின்ற  உண்மைகளின் பதிவு .   
காணாமல் போன ,  கவனமாக  மறைக்கப்பட்ட சான்றுகளின்  தேடலின்  பதிவுகள்  ,
இருக்குமிடம்  தேடி  -  கண்டுபிடித்துப்போய்,  “ எங்கே  காட்டுங்கள்  பார்ப்போம் ”  என்றால்
 ” இல்லையே ” என்று எனக்கு , முன்னால்  சொல்லிவிட்டு  முதுகுக்குப் பின்னால்  “  இவனுக்கு சட்டம் தெரியவில்லை  -  நான்  யாரையும்  கை  நீட்ட மாட்டேன் ” என்ற  -  அந்த ,  அப்படியான பதில்களுக்குள்   ஒளிந்து  கொள்ளும் பிரபல முற்போக்கு முகங்கள்.
“ இல்லை, தோழர்  நீங்கள் வரலாற்றை சிதைக்கின்றீர்கள் , இது  அறிவு நாணயமில்லை , இதுதான்  நீங்கள் பெரியாரிடம்  கற்றுக் கொண்டதா , ஏன் நீங்கள் வலிந்து புதிதாக  ஒன்றை  வரைகின்றீர்கள் ” என்று “ அவசரமான  ஆத்திரத்தை ” அள்ளித் தெளிப்பவர்கள் .
அதுமட்டுமல்ல ,  என் பக்கத்தில் இருந்த சிலரே , “ வேண்டாம் , ……….. விரும்பவில்லை ”  என்ற  ‘ வேண்டுகோள் ‘ போன்ற ‘ எச்சரிக்கைகள் ‘ ,
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் – டிசம்பரில் – பொதுவாக  பல  சிகப்புகளுக்கும் , கருப்புகளுக்கும்  ’ வெண்மணி ஜீரம் ‘ வந்துவிடும். அப்போது  யாரோ, எவரோ, எப்போதோ சொன்ன  சொல்லாடல்களையும்,  எழுதிய  எழுத்துக்களையும்   இப்போது  இவர்கள்  வாயால்
“ வாந்தி எடுக்கும் ஆரோக்கிய  “ சூழலில் ,    
 “ தொடரலாமா , விட்டுவிடுவோமே “ , என்ற  குழப்பங்கள்  எனக்குள்  வரும் .  அப்போதெல்லாம்
“ என்னங்க ஆச்சி, எந்த அளவில் இருக்கு , இன்றைக்கு இப்படி ஒரு பதிவு வந்திருக்கு பாத்திங்களா ? “  என்று  ஒரு குரல்  என்னை  ’ உசுப்பேத்திவிடும் ‘  ஆம் ,  அந்தக் குரலுக்குரியவர்  தோழமைக்குரிய  அண்ணன் , தலைவர் கொளத்தூர் மணி அவர்கள்.  மீண்டும் எனக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்  கம்ப்யூட்டரும் ,  கீ போர்டுமாக அய்க்கியமாகி விடுகிறபோது ,
 “ ஏங்க , திரும்பவும்  கண்ணுல  பிரச்சனை  வந்திடப்போவுது  நடுவுல கொஞ்சம் ரெஸ்ட் வுடுங்க “ அன்புத் துணைவியாரிடமிருந்து  கோரிக்கை  வரும். தொடர்ச்சியாக அது என்னால் மீறப்படும்போது  -  மகஜர்  வேளச்சேரிக்குப் போக , அங்கிருந்து என் செல்ல மகளிடமிருந்து அன்புக் கட்டளை , ‘ அதட்டலாய் ’ வெளிப்படும்.  இத்தனையும் கடந்து -   
நான்  வரலாற்றை மாற்றவில்லை . அல்லது சரித்திரத்தை என்  வசதிக்கு வளைக்கவில்லை . வரலாற்றின்  படிநிலையை  மாற்றியமைத்திட  நான் பரபரக்கவில்லை. யாருடைய உடமையையும்  எங்களுடையது   என்றோ  அல்லது எங்களுக்கும் உரிமை உண்டு என்றோ அதில் நாங்கள் யாரும் உரிமை கோரவில்லை , கேட்கவில்லை . முற்று முழுதாக  உங்களுக்கே  உரியதுதான் .  ஆனால் ,  உங்களுக்கே  உரித்தான  ஒன்றில்  எங்கள் தோழர்களின்  இரத்தம்  ஏன்  சிந்தப்பட்டது ?  உங்களுக்குத்  தெரியும் அது  எங்களின்  இரத்தம்  என்று  பின் ஏன்  மறைக்கின்றீர்கள் ,  அல்லது  மறுக்கின்றீர்கள் ?  
 ஆம் ,
“ பச்சைத் தீ ”  - இந்த  ஒற்றை  செய்தியைத்தான்  உங்கள் எல்லோர் முன்பும் கேள்வியாக  வைக்கிறது !  
இப்போது “ பச்சைத் தீ ” ஏறத்தாழ  இறுதிக் கட்டத்தில் ,   சிறப்பாக வரும் என்ற நம்பிக்கையை  எனக்குள்  சூடாய்  உணர்கிறேன் .