20 டிசம்பர் 2011

வெண்மணியிலிருந்து


             வெண்மணியிலிருந்து......,
                                                                        பசு.கவுதமன்.
து வெறும் வாய்மொழி வரலாறு அல்ல. சற்றேறக்குறைய இரண்டாண்டு கால களஆய்வு. முன்னாள் நாகைத் தாலுக்கா - இன்னாள் நாகை மாவட்டம்- விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சியின், ஆவேசத்தின் விளைவாக அழித்தொழிக்கப்பட்ட ' பண்ணை ராஜ்யங்கள் ' , மீட்டெடுக்கப்பட்ட ' சம உரிமையும், சுயமரியாதையும் ' .

இந்த பதிவுகளுக்கான ,  ஏறத்தாழ இரண்டாண்டுகால களஆய்வில் வெவ் வேறு கருத்துக்களையும், சிந்தனைகளையும் கொண்ட தோழர்களின் சந்திப்புகள் – உரையாடல்கள் – கோபங்கள் - 'சாபங்கள்' - " நீங்க மட்டுந் தான் பாக்கி " என்ற எள்ளல்கள் – ஆவேசங்கள் – ஆதங்கங்கள் – இயலாமையின் வார்த்தை வெளிப்பாடுகள் – மறுக்கப்பட்ட நியாயங்கள் – மறைக்கப்பட்ட உண்மைகள் – நிகழ்வுகளின் நினைவுகள் – நினைவுகளில் புதைந்துபோன நிமிடங்கள் – கண்கள் கசிந்து மீண்டெழுந்த கணங்கள். இப்படியான உணர்வுக் குவியல்கள் - நேரிடையாகக் கண்டவற்றின் பதிவு கள்- பல இரவுகளையும், உறவுகளையும் தொலைத்துவிட்டு நான் படித்த, சேகரித்த பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த எழுத்தாளர்களின் எழுத்துகள் – காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள் – சிற்றிதழ்கள் – சிறு வெளியீடுகள் – ஆய்வுக்கட்டுரைகள் – நீதிமன்ற குறிப்புகள் – தீர்ப்புகள் – வலைதளத் தேடல்கள் என்ற இவைகளின் தொகுப்பு    நூல்வடிவம் பெற உள்ள நிலை யில் நூலின் முகப்பு – அட்டை – எப்படியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனை எனக்கும், பதிப்பாளர் தோழர் சாக்கோட்டை இளங்கோவன் அவர்களுக்கும்.

தோழர் ஏஜிகே அவர்களை வெண்மணித் தியாகிகளின் நினைவுத் தூணுக் கருகில் நிற்கவைத்து புகைப்படமெடுத்து அதனை முகப்பாக்குவோம் என்ற முடிவுடன் இருவருமாக அவரிடம் சொன்னோம். நீண்ட – இரண்டு, மூன்று மாதகால மவுனத்திற்குப்பின் , கடந்தவாரம், வெண்மணியில் உள்ள ஒரு தோழரிடம், தோழர் சரவணனை அனுப்பி " அவரிடம் ஒரு புத்தகத்தின் அட்டைக்காகப் புகைப்படம் எடுக்கத் தோழர்கள் வருகின்றார்கள். அவர்க ளோடு நானும் வருகிறேன். 13ம் தேதி (13. 12. 2011) காலை 11மணிக்கு அங்கு வந்துவிடுவோம் " என்ற தகவலைச் சொல்லச்சொல்லி, அந்தத் தோழரை அங்கே காத்திருக்கும்படியும் செய்தியினை சொல்லி விட்டார்.

 
13ஆம் தேதி காலை தோழர் ஏஜிகே அவர்களை அவரது அந்தணப்பேட்டை இல்லத்திலிருந்து ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு புறப்பட்டோம். தோழர் பிரகாஷ் ஆட்டோ ஓட்டுகின்றார். அவரோடு தோழர் சரவணன். பின்னிருக்கையில் தோழர் ஏஜிகேயுடன் நானும் தோழர் இளங்கோவனும். குண்டும் குழியுமான அந்த கப்பிச்சாலையில் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவு கீழ்வெண்மணிக்கான அந்தத் தடத்தில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பயணிப்பதாகச் சொன்னார் தோழர் ஏஜிகே.

அந்தணப்பேட்டையிலிருந்து, பாப்பாகோயில், நரியங்குடி, கருவேலி, சிக்கல்பத்து, புதுச்சேரி, ஆவராணி, வடக்காலத்தூர், இலுப்பூர், தேவூர், வழியாக கீழ்வெண்மணி வரும்வரை பல நிகழ்வுகளை நினைவுபடுத்தி சொல்லிக்கொண்டே வந்தார். கருவேலியின் ஒரு திருப்பத்தில், வாய்க்கால் 'சட்டர்ஸ்'. "இங்குதான் இருஞ்சியூர் நாயுடு ஆட்களுக்கும், நம்ம ஆட்களுக்குமொரு பெரிய மோதல் நடந்தது". அடுத்து சிக்கல்பத்துக்கு முன்னாடி ஒரு வளவு "இங்கதான் நெல்லு ஏத்திவற்ற பாரவண்டிய மறிச்சு மூட்டைகளை எறக்கிக்கிட்டு வரப்புவழியே போறது". என்று  ஒவ்வொரு ஊர் குறித்தும், இடம் குறித்தும் சொல்லுவதற்கு அவரிடம் நிறைய சம்பவங் களும், செய்திகளும் இருந்தன, இருக்கின்றன.


கீழவெண்மணி நுழைவு வளைவுக்கருகே ஆட்டோவிலிருந்து இறங்கினோம். காத்துக்கொண்டிருந்தத் தோழர்கள், அவர்களில்  வயது சென்ற பெண்களும், அருகில் வந்தனர். தோழர் ஏஜிகேவை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கின்ற ஆவலும், பரவசமும் அவர்களில் பலருக்கு. வயதின் காரணமாக சிலரை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. எங்களை அறிமுகப்படுத்திவிட்டு எதற்காக வந்துள்ளோம் என்பதைச் சொல்கின்றார். அப்போது அவர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த தோழர்,
" அய்யா, இப்போதுதான் கட்டட வேலைகளைப் பார்ப்பதற்காக மாவட் டமும், ஒன்றியமும் வந்திருந்தார்கள். அவர்களிடம், ஏஜிகே வற்ராரு ஏதோ புத்தகத்துக்கு படம் எடுக்க என்று சொன்னேன். அதற்கு, யாரா இருந்தாலும் அங்கே போகவும், படமெடுக்கவும் பர்மிசன் வாங்கனும். அதனால 'மாவட் டத்துக்கிட்டே' பேசிட சொல்லுங்க என்றதனால் நான் அவரிடமே எண்களை வாங்கி வைத்துள்ளேன்" என்று சொல்லி இரண்டு எண்களைக் கொடுத்தார்.

"என்னவாம், ஏன் ஒருபடமெடுக்க நான் ஏன் அவர்களைக் கேட்கனும். இது எனக்கு சரியா...." என்று ஏதோ சொல்ல வந்தவர் , எங்களிடம்," சரி, நான் வரல. நீங்க அவர்களிடம் பேசி கேட்டுவிட்டு படம் எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்லி அந்தத் தோழரிடம் நீங்க அவங்கக் கூட இருங்க என்று சொல்லிவிட்டு அவரை சந்திக்க வந்தத் தோழர்களோடு பேசத்துவங்கி விட்டார். அப்போது," இது என்னா புதுப்பண்ணையமாவுல்ல இருக்கு, அய்யாவுக்கே உரிமையில்லேன்னா வேற எந்த.... அதில உரிமையிருக்கு"  என்று ஒரு வயதான பெண்மணித் தோழர் சொன்னது என் காதில் விழுந்தது. நான் தோழர் இளங்கோவனிடம் சொன்னேன், "அண்ணே, அப்படி ஒன்றும் தேவையில்லை. நாம திரும்பிடலாம்" என்று சொன்னேன். அதற்கு தோழர் இளங்கோவன்,"இரு, தோழர் கொடுத்த நம்பரில் பேசுவோம்" என்று சொல்லி விட்டு,

அந்த எண்ணில் தொடர்புகொள்ள அதிலே பட்டுக்கோட்டையாரின் பாடல் வந்தது,"அய்யா என் பெயர் இளங்கோவன். நாங்கள் அய்யா ஏஜிகே உடன் வந்துள்ளோம். ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவிடத்தினை படமெடுக்க வந்தோம். இங்கே தோழர் களிடம் அனுமதியில்லாமல் யாரும் போகக் கூடாது. 'மாவட்டத்திடம்' பேசி பர்மிசன் வாங்கிக்கொண்டு போகனும் என்று சொல்லிவிட்டுப் போனார் களாம். உங்களிடம் பேசச்சொல்லி இந்த எண்ணைக் கொடுத்தார்கள். அய்யா ஏஜிகேயும் இங்கே இருக்கின்றார். அதுதான் பேசுகின்றேன்." என்று சொன்னதற்கு, "அது ஒன்றுமில்லை, நீங்கள் ஒன்றியத்திடம் ஒருவார்த்தை சொல்லிவிடுங்கள்." என்று மறுபக்கத்திலிருந்து - 'மாவட்டத்திடமிருந்து'- பதில்வர, தோழர் இளங்கோவன்,

அந்த மற்றொரு எண்ணில் 'ஒன்றியத்தை'த் தொடர்புகொண்டு மீண்டும் அதே செய்தியைச் சொல்ல, அவர்,"நான் 'மாவட்டத்திடம்' ஒரு வார்த்தை சொல்லிவிட்டு உங்களிடம் பேசுகின்றேன்" என்று சொல்லி ஒரு அரைமணி நேரம் பதிலில்லாமல் மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது, அவர் எடுக்கவில்லை. எனவே மீண்டும் 'மாவட்டத்திடமே' பேசிவிடலாம் என்று அவரோடு தொடர்புகொண்டு," 'ஒன்றியத்திடம்' பேசினோம். அவர் உங்க ளோடு பேசிவிட்டு பேசுவதாகச் சொன்னார். அவர் இதுவரை பேசவில்லை, உங்களோடு பேசினாரா" என்று கேட்டபோது, "அவர் பேசவில்லை. நீங்கள் 'ஒன்றியத்திடம்' சொல்லிட்டிங்கன்னா, போய்எடுத்துக்குங்க" என்று சொல்லிய பிறகு கீழ்வெண்மணி வளைவிலிருந்து நினைவிடத்திற்கு அந்தத் தோழருடன் நடக்கத் துவங்கினோம். ஆனால் எங்களுடன் தோழர் ஏஜிகே வரவில்லை.



நான், தோழர் இளங்கோவன், தோழர் சரவணன் மூவருமாக வெண்மணி தியாகிகளின் நினைவிடத்திற்கு வெளியில் நின்று படமெடுத்துக் கொண்டிருந்தபோது, எதிரே புதிய நினைவிடத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது, அங்கிருந்து தகவல் வந்து நினைவிடத்தின் கேட் திறக்கப்பட்டது. பிறகு உள்ளே சென்று படமெடுத்துக் கொண்டு திரும்பியபோது, அங்கே, ஏஜிகே வருவாரென்று காத்திருந்த சிலர் அவர் வராத காரணமறிந்து கண்கள் விரிய உதட்டைப் பிதுக்கினார்கள். வேறு சிலரோ..... அவர்கள் சொன்னவைகளை இங்கே சொல்வது நாகரிகமாக இருக்காது. மீண்டும் கீழ்வெண்மணி வளைவுக்கு வந்தபோது தோழர் ஏஜிகேவினைச் சுற்றி ஒரு கூட்டம் அவரோடு பேசிக்கொண்டிருந்தது எல்லோரிடமும் விடைபெற்று திரும்பினோம். ஆனால் யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு இறுக்கமான மனநிலை.


நான் ஊர் திரும்ப தோழர் ஏஜிகேயிடம் விடைபெறும்போது அவர் சொன்னார்," நான் அந்த இடத்தில், அந்தத் தியாகிகளின் நினைவிடத்தில் எங்கள் பேரவையின் வீரவணக்கத்தை செலுத்த எண்ணியிருந்தேன். அது முடியல, பரவாயில்ல" என்று சொன்னார். அப்போது எனக்குள் அந்த வலியை உணர்ந்தேன். இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாரையும் எங்கேயும், எவருடனும் வைத்துப் படமெடுத்துவிடலாம். 20க்கு20 ப்ளக்ஸ் கூட போட்டுவிடலாம். ஆனால் அதில் நேர்மையும், நாணயமும், உண்மையும் இருக்காது.



கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவிடம் அமைய, அந்த நினைவிடத் திறப்பிற்கு தோழர் ஜோதிபாசு அவர்கள் வந்தபோது காவல்துறையினை மீறி அவரை பேரணியாக அழைத்துச் சென்றது, கோபாலகிருஷ்ணநாயுடுவை அவர் இடத்திற்கே சென்று எச்சரித்தது என்று பலரிடம் நான் பதிவு செய்தவைகள் என் காதுக்குள் ஒலித்ததையும் மீறி அந்த வயதான பெண்மணி, வெண்மணியில் சொன்ன," இது என்னா புதுப்பண்ணைய மாவுல்ல இருக்கு, அய்யாவுக்கே உரிமையில்லேன்னா வேற எந்த.... அதில உரிமையிருக்கு" ஒலித்தது.

ஆம்,   தோழர்களே அரசியல்மயப்பட்டு விட்ட இன்றைய சிவப்புப் பண்ணை யத்தினை – மன்னிக்கவும் – அன்றைய செங்கொடி விவசாய இயக்கத்தினை யும், அன்றைக்குக் கொடிகட்டிப் பறந்த திராவிடர் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தினையும், தேசிய, திராவிடக் கட்சி அரசியலின் உறவுகளையும் உரசல்களையும்    மீண்டும் ஒரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்போம் நூல் வடிவில்!  நினைவுகளும், நிகழ்வுகளுமாக, நாகை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களின் வீரெழுச்சியாக, மறுக்கப்பட்ட நீதிகளும், மறைக்கப்பட்ட உண்மைகளுமாக அச்சில் உங்கள் கைகளில் விரைவில்!  
                    

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக