10 அக்டோபர் 2009

பொதுவாழ்வில்மானத்தைப் பார்க்காதீர்கள்!

நாம் ஆரம்பமுதல் இன்றுவரை ஒரே தன்மையான கொள்கைகளை வற்புறுத்தி வருகிறவர்கள்; மற்றவர்களைப் போல் அடிக்ககடி கொள்கைகளை கீழுக்கு மாற்றும் வழக்கம் நம்மிடத்தில் இல்லை. ஆகவே குடும்பக் கவலையில்லாத திராவிட வாலிபர் கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வெளியில் வந்து மக்கட்பணி புரிய வேண்டும்.
மக்கட்குத் தொண்டாற்றக்கூடியவன் மானவமானத்தைக் கவனித்தல் கூடாது. வீட்டை கவனிக்கக்கூடாது. என்னைப்பற்றிக் குறைகூறுவோர் பலர்; அதிலும் பணம், சார்பு, சம்பந்தமாகக் கட்டுப்பாடாய்ச் செய்யும் பிரச்சாரம். பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் வி­மப்பிரச்சாரம் ஆகியவை மலைபோல். நான் அவைகளையயல்லாம் கவனிக்காம லிருப்பதால்தான் என்னுடைய மானம் அப்படியே நிலைத்திருக்கிறது. எது சொன்னாலும், ‘ஆம் அப்படித்தான் முடிந்ததைப்பார்’ என்பேன். சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் எதிரி ஜெயித்துவிடுவான்.
நான் சமாதானம் சொல்வது என்மனதுக்குத்தான்.அது போலவே நீங்கள் முதலில் உங்கள் மனத்தை, நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாய் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.ஒருவன் தன்னுடையசொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும் காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு வந்து விட்டால் இவை இரண்டையும் இலட்சியம் செய்யக்கூடாது.
இதை மானத்திலும், காலத்திலும் திருவள்ளுவரே கூறியுள்ளார். மனத்துள்ளே குற்றம்குறை இருந்தால் வெளியில் செய்யுங்காரியமும் குறையடையதாகவே இருக்கும் என்பதை நான் விஞ்ஞான (சயன்ஸ்) முறைப்படி கூறுகிறேன்.ஆகையினால்? வாலிபத்தோழர்களே உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் நீங்கள் கொண்டு காரியத்தைத் துணிவுடன் நடத்தினீர்களானால் வெற்றி உங்களை வந்து பணியும், உங்கள் எதிரிகள் நாசமாவார்கள்.
இறுதியாக இன்று உங்களுடைய ஆர்வத்தாலும், அன்பாலும், என்மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும் என்னைப்பத்து வயது குறைந்தவனாகவும் 10 டிகிரி ஊக்கம் அதிகம் கொண்டவனாகவும் ஆக்கிவைத்ததற்கு உங்களுக்கு என் மனப்பூர்வமானநன்றியைச் செலுத்துகிறேன்.
(குடிஅரசு ‡ 30.09.1944)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக