11 அக்டோபர் 2009

இது கவிதையல்ல.........!


தஞ்சை,இராமனாதன் மன்றத்தில்,16.03.1986 ல் நடைபெற்ற தமிழினப் பேரவைக் கவியரங்கத்தில்...தலைமை,பேரா.ந.வெற்றியழகன்.
               =================================================
வணக்கம்.
இது கவிதையல்ல....
ஆமாம்....,
பெரியாருக்குப் பிறகும்
இங்கே,
பிரளயம் ஏற்படவில்லையெனில்
யார்தான்.. எதை எழுதி.. எதைப் பேசி !
முகங்களைத் தொலைத்துவிட்டு
முகவரி தேடுபவர்களல்லாவா நாம் !
எனவே..,
வார்த்தைகளில் கோபமிருக்கும்
வருத்தப்படாதீர்கள் !

              கல் தோன்றி, மண் தோன்றா
              காலத்தே முன் தோன்றிய
              மூத்தகுடியின் முதல்மொழி !
              அகத்தையும், புறத்தையும்
              அழகாய் அடுக்கிச் சொல்லி
              சங்கத்தில் வளர்ந்த தங்கத்தமிழ் !
              தாய் பார்வதியின் முலைப்பால்
              தமிழாய் வந்த்தாய்
              சப்பிய சம்பந்தன்
              சத்தியம் செய்தபின்...,
              பாலும், தெளிதேனும், பருப்பும்
              கலந்து கொடுத்து
              சங்கத்தமிழ் மூன்றையுந்தா வென்று
              என்றைக்குக் கோரிக்கை விட்டாயோ
              தமிழா...,
              அதையேதான் இன்றைக்கும்
              உன் தலைவர்களும், தளபதிகளும்
              ஒரே ஒரு வித்தியாசம் ,
              அது, ஆண்டவனிடம் பாடியது..
              இது, ஆள்பவனிடம் யாசிப்பது..!
              இடம், வலம் மாறுகிறோம்
              இருப்பினும் நாம் செக்குமாடுகள்..!
              எனவே, தமிழர்களே வருத்தப்படாதீர்கள்
              இது தொடர் நிகழ்சிகள்..!
             
ஒரு காலத்தில்,
யானை கட்டிப்போரடித்துப்
பொங்கலிட்ட சோற்றினை
மாடு பூட்டி உடைத்துவிட்டு
இன்றைக்குப்
பானைக்குள் கிடக்கின்றப்
பருக்கையினைப் பொறுக்க
பாதாளக் கரண்டி இல்லை.
எனவே,
தலைவாரிப் பூச்சூட்டி உன்னைப்
பாடசாலைக்குத்
தட்டோடு போவென்று
சொன்னாள் உன் அன்னை..!
எனவே, தமிழர்களே வருத்தப்படாதீர்கள்
அதுவெல்லாம் சரித்திரக் குறிப்புகள்..!

அப்போதெல்லாம்
புகார் கடற்கரையில்
புதுப்புது முத்துகள், பவளங்கள்
யவனர்களின் நாவாய்கள்
எப்போதும் நிற்கும், ஏற்றிச் செல்லும்..!
என்றைக்கு
கைபர் கால் வாய்களில்
முத்தெடுக்க முகம் புதைந்தார்களோ
அன்றைக்குத் தான்
வர்ணங்கள் பூசப்பட்டு
வரிசையாய் நிறுத்தப் பட்டார்கள்.
எனவே, தமிழர்களே வருத்தப்படாதீர்கள்
அதுவெல்லாம் வரலாற்றுச் செய்திகள்..!

              ஒரு நேரத்தில்
              இமயமேறி கல்லெடுத்து
              வெற்றிக் கொடியேற்றி
              கப்பலேறி கடல் கடந்து
              கடாரத்தை வென்று
              அடடா...,
              சோழனும், சேரனும், பாண்டியனும்
              போடாத சண்டையா, ஏற்றாத கொடியா..?
              இப்போது நமக்கும்
              ஆளுக்கொரு கொடி,
              நாளுக்கொரு சண்டை..!
              தமிழனென்றோர் இனமுண்டு,
              தனியே அவனுக்கோர் குணமுண்டு..!
              எனவே, தமிழர்களே வருத்தப்படாதீர்கள்
              இதுவெல்லாம் பரம்பரைப் புத்தி..!
             
மொழி போச்சு – வந்த
வழி போச்சு – வாழ்ந்த
நிலை போச்சு – உனக்கு
எல்லாம் போச்சு – தமிழனே..!
வெள்ளைக்காரன் போனபோது
ஆடினோமே, பள்ளு பாடினோமே
ஆனந்த சுதந்திரம் வந்ததென்று
ஆடி முடித்தபோது
அடியிலிருந்த உன்
கோவணமும் போச்சுதே தமிழனே..!
தேடிப் பார்த்தபோது அது
டெல்லிக்குக் குல்லாயாய் ஆச்சுதே
உனக்கு,
அறிவும், மானமும்
அடியோடு போச்சுதே தமிழினமே..!

              ஒரே ஒரு மனிதன் மட்டும்
              உண்மையைச் சொன்னான்.
              இது, அதிகார மாற்றம்,
              துக்கப்படுங்கள், என்று கேட்டோமா..?
              அண்ணன்கள் சந்தோஷப் பட்டார்கள்,
              அருமைத் தம்பிகளோ சரணம் போட்டார்கள்..!
              இப்போது,
              அய்ந்து ஆண்டுகளுக்கொரு முறை
              அலிகளை அனுப்பி
              கோரிக்கை விடுக்கிறோம்
              கோவணம் கேட்டு...!
              47 லிருந்தே நம்
              சிறகுகளை முறித்துவிட்டு
              பறவைகள் என்றார்கள்..!
              குரல்வளையை நெறித்துவிட்டு
              குயில்கள் என்றார்கள்..!
              பவுர்னமிகளை அகற்றிவிட்டு
              அமாவாசைகளை மட்டுமே
              நிறுத்தினார்கள், நிரந்தரமாய்..!
              நாமோ
              சுதந்திர நாட்டின் நிரந்தர அடிமைகள்..!
              இங்கு,
              சிலருக்கு மட்டுமே சோசலிசதேவி
              முந்தாணை விரித்து, முலைகள் காட்டுவாள்..!
             
              ஏ.. தமிழினமே
              சுதந்திரம் என்பது இங்கு
              யாருக்கு வந்தது..?
              உனக்கு மீசை என்பது
              சும்மா பேருக்கு இருந்தது..!
              ஏ.. தமிழினமே
              திராவிடநாடு திராவிடர்களுக்கே
              என்றார்கள் – அது ,
              திரைப்பட வசனமாயிற்று..!
              தமிழ்நாடு தமிழருக்கே
              என்றார்கள் – அது ,
              எமர்ஜென்சியோடு எடுபட்டது..!
              இப்போது அது
              மாத சம்பளக்காரனுக்கு
              முதல்தேதி போல
              சங்கட்த்தோடு நினைக்கப்படுகிறது..!
              ஏ... தமிழினமே நீ ,
              அடிமையாக இருந்திருந்தாலாவது
              அர்த்தம் கிடைத்திருக்கும் – அங்கே
              விடுதலை நெருப்பு வேர் விட்டிருக்கும்...!


ஒரு பெரியாருக்குப் பிறகும்
இங்கே பிரளயம் வரவில்லையெனில்
ஏ..தமிழினமே உனக்கு
தடைதான் எது..?
ஆம் ,
உனக்கு நீயே தடை..!
உன் தலைவர்களே
உனக்கு மடை..!
வழக்காடப் போன
உன் தலைவர்களுக்கு
வாய்தா கேட்கவும்
வாக்குப் பொறுக்கி
நாக்குத் துருத்திப்
பேரம் பேசவும்
நேரம் போதவில்லை.
இதில் – சொந்தப்
புத்திரர்களை சுகமாய்
பத்திரப்படுத்திவிட்டு
ஊரான்பிள்ளைகள் உதைபட
கொடிபிடித்தக் கைகளுடன்
குடும்பத்தோடு வா என்
கொள்கைத் தங்கமே – என்று
கூப்பாடு...!
கூரையே ஏறமுடியாத இந்தக்
கோணல்பிறவிகள்
வானம் ஏறுவார்களாம்..!
இவர்களுக்கு ஈழமே
இப்போது இஷ்டமான பாட்டு...!
எரிகின்ற ஈழத்தின்
சாம்பலைக்காட்டி சம்பாதிக்கும் சாகசம்...!

      
              83 களில்
              கட்சிகள் மறந்து
              கடவுளை துறந்து
              மதத்தை ஒதுக்கி
              ஜாதியை விட்டு பொங்கி
              வீதிக்கு வந்த மக்கள் கூட்டத்தை
              அறிக்கைகளாலேயே அணையிட்ட
              அயோக்கியர்கள்.. இந்த
              விடுபட்ட தலைகள்
              விடுதலை பேசுகிறது...!
பாடமாக வேண்டிய பெரியார்
கண்ணாடி சட்டத்திற்குள்
படமானதோடு சரி...!
செவ்வாய் , வெள்ளி
விளக்கேற்றி தூபம் காட்டு...!
காந்திக்கு அக்டோபரில் பஜனை..!
பெரியாருக்கு செப்டம்பரில் ஜெயந்தி...!
அன்றைக்கு
சபலத்திற்கு ஆளாகமாட்டோம் என்று
சத்தியம் செய்..!
அவர்கள்
சுலபமாய்ச் சுருட்டிக்கொள்வார்கள்...!
தலைகளை நம்பி
விலைபோனது போதும்
தடைகளை உடை...!

                                ஓ..இளைய தமிழினமே
              ஈழத்தில் பார்..,
              புதிய விடியலை அதற்குப்
              பிரபாகரன் என்று பெயர்...!
              பார்... அவன்
              தூக்கியத் துப்பாக்கியின்
              தெறிக்கும் நெருப்பில்
              புதிய சூரியன் புலருவதை...!
             
              தேசம் மகத்தானது – அதற்கான
              தியாகம் அதைவிட புனிதமானது..!
              வாலிபக் கனாக்களை
              நிராகரித்துவிட்டு ஈழத்தின்
              நிரந்தர விடியலுக்காய்
              விரலை உயர்த்தி
              வின்னைக் கிழிக்கின்றானே...!
              உன்னுடைய தியாகமோ
              உண்ணாமல் இருப்பதும்
              கருப்புச் சட்டைப் போடுவதும்...!

              தேசம் மகத்தானது – அதற்கான
              தியாகம் அதைவிட புனிதமானது...!
              பாதைகள் இல்லையா...கலங்காதே
              கால்களை நடத்து...!
              கைகாட்டிமரங்களில்லையா...
              அச்சம் தவிர்..!
              அதோ பார்...,
              பொது உரிமை போதித்தப்
              பெரியாரின் அறிவுச்சுடர்...!
              புறப்படு...,
              புதிய வெளிச்சத்தைப்
              புணரமைப்போம்...!
              உன்னை அப்புறப்படுத்தி
              அறிக்கைகள் வரலாம்..,
              விட்டு விலகு அது
              ஒருவழிப்பாதை...!
              பக்கத் தடுப்பை உடைத்தெறி...!
              பார்வையை அகலப்படுத்து...!
              ஒதியமரங்கள் உன் வீட்டுக்கு
              உத்திரமாக இருந்த்தை உணர முடியும்...!
              ஆயிரம் பூக்கள் மலரட்டும்...!
              நன்றி... வணக்கம்...!


[வார்த்தைகளை மாற்றி
வாக்கியம் அமைக்க
தோதாய் எழுதிய
பாரதிக்கும்,புரட்சிக் கவிஞனுக்கும்,
வைரமுத்துவிற்கும்
வணக்கமான நன்றி]
----------------------------------------------------------------------------------------       

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக