09 மார்ச் 2015

உலக கண் நீர் அழுத்த வாரம்

உலக கண் நீர் அழுத்த வாரம்


 WORLD GLAUCOMA WEEK – March 08-14

உலக கண் நீர் அழுத்த நோய் மருத்துவர்கள் சங்கமும், உலக கண் நீர் அழுத்த நோயாளிகள் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-வது வாரம் உலக கண் நீர் அழுத்த வாரமாக கடைப்பிடிக்கின்றனர். இந்நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நடத்தப்படுகின்ற நிகழ்வு அது. இந்த ஆண்டு மார்ச் 08 முதல் 14 வரை நடைபெறுகின்றது.
க்ளாக்கோமா ( Glaucoma ) என்பது கண் நீர் அழுத்த நோய் ஆகும்..கண் நீர் அழுத்தம் இயல்பாக 11 லிருந்து 21 mmHg இருக்க வேண்டும். இந்த அழுத்தம் அதிகரிக்கின்றபோது அல்லது வேறுபடுகின்றபோது கண் நீர் அழுத்த நோய் ஏற்படுகின்றது. இதனால் கண்ணின் பார்வை நரம்பு இழைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் பிம்பங்களை மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகளும் செயலிழக்கின்றன.
இந்நோயால் நமது நாட்டில் 1.2 கோடி பேரும், உலக அளவில் 6.5 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் சொல்கிறது..குறிப்பாக, இந்த நோய் பாதிப்படைந்த இந்தியர்களில் 95 விழுக்காட்டினர் பார்வையை இழக்கும் வரை இந்நோய் குறித்து அறியாமலேயே உள்ளனர். காரணம் பெரும்பாலும் இது பதுங்கி இருந்து பார்வையினைக் கொல்லக் கூடியது. நோய் பாதித்ததை விரைவில் கண்டறிந்தால் மேலும் பாதிப்படையாமல் தடுத்துவிட முடியும் .பார்வை இழந்த பிறகு இதனை சரிப்படுத்த முடியாது.
இது 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரக்கூடிய வாய்ப்புண்டு. அதுபோலவே குடும்பவழி – பரம்பரையாகவும் – வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்றைய மருத்துவத்தில் இதனை வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் கட்டுப்படுத்தவும் வழிகள் உண்டு. ஆனால் முழுவதுமாக பார்வை இழந்துவிட்டால் பார்வை மீளப்பெற வாய்ப்பில்லை. எனவே, தோழர்களே உங்களுக்கு வயது நாற்பதைக் கடந்து விட்டதெனில் ஒருமுறை முழுமையாக, முறையான கண் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள்..
இதை நான் ஏன் பதிவு செய்கின்றேன் ?
.2013 – ஆகஸ்டில் நான் க்ளாக்கோமாவினால் பாதிக்கப்பட்டு வலது கண்ணில் பார்வையினை தற்காலிகமாக இழந்து பின் மீளப்பெற்றேன். அந்த நிகழ்வை அப்போது பதிவு செய்தேன்.  அந்தப்பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.

மீண்டு  …  ம், பார்க்கின்றேன் !


18.08.2013 அன்று மதியத்திலிருந்தே எனது வலதுகண் பார்வையில் பனி படர்வதைப் போன்று கொஞ்சமாக உணர்ந்தேன். எனினும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் – 19ஆம் தேதி விடிந்தபோது எனது வலது கண்ணில் முற்றிலுமாகப் பார்வை இல்லை. உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும் யாரிடமும் சொல்லாமல், வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெதுவாக என் துணைவியார் அறிவுச்செல்வியிடம்,“ அறிவு, எனக்கு வலது கண்ணில் பார்வை மறைக்கிற மாதிரி இருக்கு, உன்னை பனிக்குள்ள பாக்கறமாறி இருக்கு. இன்னக்கி லீவு போடுறியா? இங்க டாக்டரைப் பாக்கலாம்” என்று கேட்டபோது அவரின் அலுவலக நெருக்கடி காரணமாக இயலாத நிலையினைச் சொல்லி, இரவு எட்டு மணிக்கு வந்த பின்னால் டாக்டரிடம் போவோம் என்று சொல்லி, “உங்களுக்குத்தான் 24ஆம் தேதி சங்கரநேத்ராலயாவில் ( சென்னை ) அப்பாயிண்மெண்ட் இருக்குள்ளே பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு திருச்சிக்கு (அலுவலகத்திற்கு)ப் போய்விட்டார்.
நான், காலை 9 மணிக்குமேல் மருத்துவர் திரு. ராஜ மணிகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “ இப்படி விஷன் சட்டென்று போகக்கூடாது. நீங்க சங்கர நேத்ராலயாவை தொடர்பு கொண்டு பேசுங்கள். 24ஆம் தேதிவரை வெயிட் செய்ய வேண்டாம். கூடவே தஞ்சையிலேயே யாராவது டாக்டரைப் பாருங்கள்” என்று சொன்னார். உடனே தஞ்சையில் மருத்துவர்.ப. நல்லமுத்து அவர்களிடம் சென்று பரிசோதித்தபோது அவரும் அதையே சொல்லி, இரண்டு மாத்திரைகள் எழுதிக்கொடுத்து இது முதலுதவிதான், நீங்கள் உடனடியாக திருச்சி ஜோசப் போங்கள் என்றார். நான் கடந்த ஓராண்டாக சென்னை சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை எடுப்பதை சொல்லி அங்கேயே போகின்றேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவே  சென்னை புறப்பட்டு மறுநாள் காலை சங்கரநேத்ராலயா சென்று, அங்கு சிகிச்சை பெற முடியாத நிலையில் உடன் அன்று மாலை 5 மணிக்குள் திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனைக்கு வந்து 22ஆம் தேதி மாலை வரை சிகிச்சைப் பெற்று 23ஆம் தேதி மதியத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக பார்வை வரப்பெற்று – இதோ, இப்போது வழமை போல ‘ வலது கண்ணாலும் ’ மீண்டும் பார்க்கும் நிலை வரப்பெற்றுள்ளேன்.
எனக்கு சிகிச்சை வழங்கிய தஞ்சை, கண் மருத்துவர் திருமிகு ப. நல்லமுத்து, திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் திருமிகு சுகண்யா, திருமிகு சுஜாதா, திருமிகு கலாவதி, மற்றும் பெயர் தெரியாத துணை மருத்துவர்கள், செவிலியர்களுக்கும்,
என் முகமறியாமலேலே சென்னை, சங்கரநேத்ராலயாவில் எனக்காக முயற்சித்த அந்த மருத்துவமனையின் மருத்துவர் திருமிகு விஜயகுமார் மற்றும் திருவரங்கம் எல் ஐ சி பாலா அவர்களுக்கும், திருமிகு அறிவுக்கடல் அவர்களுக்கும், சென்னை, சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை பெறமுடியாத நிலையில், திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனையில் திருமிகு கலியமூர்த்தியிடம் தொடர்புகொண்டு, சிகிச்சை பெற ஏற்பாடு செய்து உடனிருந்த திருமிகு அறிவுச்சுடர் இரவிக்குமார் அவர்களுக்கும்,
எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள என்னைப் பக்குவப்படுத்திய என் துணைவி அறிவுச்செல்வி, அன்பு மகள் தென்றல், எல்லா நிலைகளிலும் எங்கள் துணையாக உடன் வருகின்ற தோழனும், மருமகனுமாகிய கிறிஸ்டோபர் டோமினிக் இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
 செய்தி அறிந்து உடன் அலைபேசியிலும், நேரிலும் தொடர்புகொண்டு நலம் பெற விழைந்த அண்ணன் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் குமாரதேவன், அன்வர் பாலசிங்கம், சோலை.மாரியப்பன், ஜவகர், பொறியாளர் மணிவண்ணன், தோழர் பாலன், அண்டனி, புலவர் செல்லகலைவாணன், வழக்கறிஞர்கள் மா.கருணாநிதி, கோ.கருணாநிதி, பாரதிபுத்தகாலயம் நாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கங்களும்.
அதுபோன்றே ‘அப்படியா’ என்று உள்ளுக்குள் மகிழ்ந்த இனிய நண்பர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இங்கே ஒரு செய்தியினை பதிவு செய்ய வேண்டும். திருச்சி ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள், என் துணைவியாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “முழுமையாக குணமடைய இரண்டு மாதங்களாவது ஆகும். அதுவரை படிப்பது, எழுதுவது குறிப்பாக சிஸ்டத்தில் – கணனி – இருப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்கள். அப்போது,“ அப்படியா அவர் படிக்க வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களே நிறைய இருக்கிறதே, அவர் எழுத வேண்டியதும் நிறைய இருக்கிறதே” என்றார் என் துணைவியார்.
ஆம், இதோ மீண்டு …. ம் …,  பார்க்கின்றேன் !
விரைவில் “ நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகிறது ? ,
பச்சைத் தீ ( வெண்மணி பதிவுகள் ), ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்-நிகழ்வுகளும் ஆகிய மூன்று தொகுப்புகளும் உங்கள் கைகளில் !
நன்றியும் தோழமையுடனும்,
பசு. கவுதமன்.
09.09.2013,

தஞ்சாவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக