16 மார்ச் 2015




அரசவைக் கவிஞனே.!


அரசியல் விபச்சாரத்தில் அங்கீகரிக்கப்பட்ட
பலதாரப் பாஞ்சாலியே!
பதவிப்பிச்சைக்குப்
பத்திரிக்கைத் தெருக்களில்
எழுத்துப் பாத்திரமேந்தியப் பாடகனே!

தனிப்பாடல் தொகுதிகளின் பக்கங்களைப்
பக்குவமாய்த் திருடி
சினிமா வீதிகளில் சில்லறையாக்குபவனே!
உன்,
“தேசப்பிதாக்களையே திகைக்க வைத்த
ஈரோட்டு வியப்புகள்!
எழுச்சியின் வெளிச்சங்கள்!
எங்கள் அம்மாவையா......?

விலாசம் தெரியாமல் விளையாடுபவனே,
போய் உன் “பாரதமாதாவையும்
அவள் தாத்தாவையும் கேள் ?
ஒரு காலப்பெட்டகத்தில்
இருட்டடிக்கப்பட்ட
இந்திய சரித்திரமே
ஈரோட்டில் சோறுட்டப்பட்டவை!

சுண்டைக்காய் நீ,
யாரோ சில தலைவெட்டிகளுக்கு
தாலாட்டுப் பாட
ஈரோட்டுச் சுடரொளியை
எழுத்துவிரல் கொண்டு மறைக்கப் பார்க்கிறாய்!
உன்னை அலட்சியப்படுத்துகிறோம்,
ஆனால் எச்சரிக்கின்றோம்!

எங்கள்,
வார்த்தைகள் கூட உன்
காவிய வாக்கியங்களை காயடித்துவிடும்!
உன்,
கற்பனைத் துணிக்கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுவிடும்!

மரியாதக்குரிய மாநில அரசே!
மதுவை ஒழிப்போமென்று
மார் தட்டிக்கொண்டே
ஒரு பீப்பாயைக்
கொலுவேற்றிய கொள்கை என்ன?
“பெரியார் விழாவெளிச்சத்தில் -
முன்பு
“காணிக்கையாக்கியதைக்
கேளிக்கையாக்கிடாதீர்கள்!
                               -: விடுதலை-13.03.1979
ஆஸ்தானக் கவிஞராய் வீற்றிருந்த கவிஞர் கண்ணதாசன் தந்தை பெரியார் குடும்பத்தப் பற்றி அவதூறாக எழுதியபோது, அதன் எதிர்வினையாக எழுதியது. 
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் இதனை மீண்டும் பதிவு செய்கின்றேன். நன்றி - விடுதலை
.................................................................................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக