26 மார்ச் 2015

திராவிடர் - பெரியார் ஒவ்வாமை


 திராவிடர் - பெரியார் ஒவ்வாமை - இது ஒரு தொடர் கட்டுரை.

ண்மைக் காலமாகவே, கடுமையான “ திராவிட ஒவ்வாமை ” க்கு ஆட்பட்டவர்களால்,
“ தமிழ் தேசிய  ரசிகர்களால் ”, “அவர்கள் மட்டுமே தமிழர்கள் ஆன, புதிய பச்சைத்துண்டு நம் ஆழ்வார்களால் ” அதிலும் குறிப்பாக , திருமிகு ஜெகத் கஸ்பர் அவர்களின் “ ம ” போன “சங்கம்”. அதில் தோழர்கள் பேரா. சுபவீ – VS – பெமவும் “திராவிடமா- தமிழ்தேசியமா ” என்று பேசிய அல்லது விவாதம் என்று சொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னால் வலைப்பூக்களிலும், முகநூல்களிலும் மயிர்க்கூச்செரியும் விவாதங்கள், வியாக்கியானங்கள், படிக்கும்போதே கண்கள் கூசிய தமிழின் உச்சபட்ச நாகரீகமான கெட்ட வார்த்தைகளை உள்ளடக்கி - ஒருவேளை அவர்கள் பெருமாள் முருகனின்,
“ கெட்டவார்த்தை பேசுங்கள் ” நூலின் அட்டையை மட்டும் படித்தவர்கள் போல – எல்லோரும் எழுதி, அது இப்போது துணுக்கு அளவுக்கு சுருங்கி, ஆனாலும் அந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை ! அது போகட்டும்,
 நான் என் செய்திக்கு வருகின்றேன். 
 சில தினங்களுக்கு முன் என்  செல்லப் பேத்தி மகிழின் இரண்டு படங்களைப் பகிர்ந் திருந்தேன். பல தோழமை உள்ளங்கள் வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தனர். பலர்  தொடர்ச்சியாக அது தொடர்பான சில செய்திகளை என்னோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எல்லோருக்கும் என் இனிய நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இது தொடர்பாக எனக்குள் எழுந்த சிந்தனைகளை இங்கே பதிவிடு கின்றேன்.
காரணம், ‘பலருக்கு’ அதுவே பதிலாக அமையக் கூடும் என்பதால் !


இந்தப் புகைப்படங்களில் ஒன்று எங்கள் மருமகன் அன்பிற்குரிய ஜே. கிறிஸ்டோபர் டொமினிக். மற்றொன்று எங்கள் மகள் அன்பிற்குரிய அ.க. தென்றல். 08.05.2011 அன்று இவர்களது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு, சாதி மறுத்து , மதம் மறுத்து  நடைபெற்றது. ( இது தென்றலின் தந்தை வழியே மூன்றாவது – தாய் வழியே நான்காவது சாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு. )  இவர்களது மகள், எங்கள் செல்லப் பேத்தி தெ.கி.மகிழ் – 14.06.2014 அன்று பிறந்தாள்.


அன்பான தோழர்களே,  மகிழ் என்ன சாதி ?
கொஞ்சம் சில, பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்,
இங்கே தேவை கருதி சாதி அல்லது வகுப்புப் பெயர்களை பதிவிட வேண்டியுள்ளது, மன்னிக்கவும்.
என்னுடைய தந்தையார், தஞ்சை ந. பசுபதி அவர்கள், த/பெ.நடேச ஆச்சாரியார், விஸ்வ கர்மாக்கள் என்று சொல்லப்படும் கம்மாளர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். எனது தாயார் ப. பத்மா அவர்கள், த/பெ.பக்கிரிசாமிப் பத்தர் அதே சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்தவர். என்றாலும் அவர்கள் தூரத்து உறவினர்கள் கூட கிடையாது. எனது தந்தையார் குடும்பத்தில் அவர் மட்டுமே சுயமரியாதை இயக்கம் சார்ந்தவர். ஆனால், என் தாயார் குடும்பத்தினர் பெரும்பாலும் சுயமரியாதை இயக்கம் சார்ந்தவர்கள். வாழ்க்கை இணையர்கள் ஆயினர். 11.02.1950 இல் நடைபெற்ற அந்த வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வில் தாலிகட்டும் சம்பிரதாயம் கிடையாது. இதன் காரணமாகவே தந்தையார் வழி உறவினர்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டனராம். இந்த செய்திகள் அவரது பேட்டி யாக 15.10.2000 தேதியிட்ட விடுதலை நாளிதழில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதே, 50களிலேயே ‘ நோ ’ தாலி – தாலி காப்பாளர்களே ! 
அப்படியே என்னுடைய துணைவியார் அ.அறிவுச்செல்வி பக்கம் வருவோம்.

   எனது தந்தையார் தஞ்சை ந.பசுபதி மற்றும் எனது மாமனார் மண்ணச்சநல்லூர்                                                                                                                                            ச.க.அரங்கராசன்
அவருடைய தந்தையார், மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன், த/பெ. கருப்பண்ணப் பிள்ளை. சோழிய வெள்ளாளர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவரது தாயார், அ.அனந்தம்மாள், த/பெ.அய்யம்பெருமாள். (பேட்டவாய்த்தலை) நாடார் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். இவர்கள் இருவரும் வாழ்க்கை இணையராகினர், எப்படி?
தந்தை பெரியாரவர்களின் அறைகூவலை ஏற்று, 1957களில் இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு, சாதியை – வகுப்பைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டத்தினைக் கொளுத்தி, இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை ஏற்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு வருகின்றார் மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன். அவரைப் போலவே பேட்டவாய்த்தலையிலிருந்து, அ.கணபதி அவர்களும், இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்திவிட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை ஏற்று திருச்சி மத்தியசிறைக்கு வருகின்றார். (தோழர் அ.கணபதி, பின்னாளில் பேட்ட வாய்த்தலை ஊராட்சி மன்ற பெருந்தலைவராக இருந்தவர்.) சிறையில் தோழர்கள் ச.க.அரங்கராசனும், அ.கணபதியும் நண்பர்களாகி, சாதி ஒழிப்பை பேச்சோடு நிறுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விவாதம் வந்தபோது, தோழர் கணபதி, என் தங்கையை மணம் செய்துகொள்ள சம்மதமா? என்று கேட்க, சம்மதித்தத் தோழர் அரங்கராசன் சிறையிலிருந்து வெளிவந்த பின் 08.10.1961 இல் அ.அனந்தம்மாளை வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொள்கின்றார். அவர்களது மூத்த மகள்தான் – எனது துணைவியார் அன்பிற்குரிய அ. அறிவுச் செல்வி அவர்கள்.
அன்பான தோழர்களே, அ. அறிவுச்செல்வி என்ன சாதி?
சரி, எங்களுடைய மகள் அ.க.தென்றல் என்ன சாதி?
அதுமட்டுமல்ல,
என்னுடைய சகோதரியின் வாழ்க்கை இணையர் வன்னியர் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு.
தோழர்களே, அவர்கள் இருவரும் என்ன சாதி?
என் சகோதரி மகளின் வாழ்க்கை இணையர், கள்ளர் சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்த வர். அவர்களது மகள் யாழினி.
அன்பார்ந்த தோழர்களே, யாழினி என்ன சாதி?
என் துணைவியாரின் சகோதரியின் துணைவர்  உடையார் வகுப்பை அல்லது சாதியைச் சார்ந்தவர். அவர்களது மகன் அ.இர. சூரியஒளி.
அன்பார்ந்த தோழர்களே, அ.இர. சூரியஒளி என்ன சாதி?
எங்களுடைய இரண்டு குடும்பங்களிலும் ஒரே சாதிக்குள் யாருக்கும் “ திருமணம் ” நடைபெறவில்லை. “இப்படித்தான் என்று”  நாங்கள் யாரும் திட்டமிட்டுக் கொள்ள வில்லை. அதற்கான மனோபாவமும், கருத்தாக்கமும் எங்களுக்குள் இயல்பாகவே இருந்தது. நாங்கள் மட்டுமல்ல. அண்மையில் நடைபெற்ற தோழர் அரசெழிலன் மகன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வுக்குப் பின்னும், இது தொடரும்தான். இப்படியாக எண்ணற்ற குடும்பங்கள் தமிழ்நாட்டில் – தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு. இது எப்படி? எதனால் சாத்தியப்பட்டது?
ஆம், தோழர்களே,
இதை சாதித்தது  திராவிடர் இயக்கம் !
இதைத்தான் தந்தை பெரியார் சாதித்தார் !
2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தி சொன்ன புத்தனது இயக்கம் பார்ப்பனர்களால் ஒழிக்கப் பட்டதே, ஏன்? பார்ப்பனர்கள் தங்களது வாழ்வாதாரமான, ஆளுமையான சாதிப் படிநிலையைக் காப்பாற்றிக் கொண்டால்தான் அவர்களால் மனுதர்மப்படிக்  கோலோச்ச முடியும் என்பதால் புத்தன் ‘ இந்தியாவுக்கு வெளியே ’ அனுப்பப்பட்டான்.
சித்தர்களால் அவர்களது பாடல்களைத் தாண்டி வேறு என்ன சாதிக்க முடிந்தது?
திருவள்ளுவரால், வள்ளுவத்தை வாழ்வியல் நெறியாக, இயக்கமாகக் கட்டமைக்க முடிந் ததா? இந்தத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் திருக்குறளை  “ திருக்குறளாக ” அறிமுகப் படுத்தவே ஒரு பெரியார்தான் தேவைப்பட்டார்.
உங்கள் இலக்கியக் கர்த்தாக்களால் எதை இயக்கமாக்க முடிந்தது, பக்தியைத் தவிர ?
முக்திநிலையில் பெரும் பேறு பெற பக்தியை இயக்கமாக்கி, எங்கள் தாயை, சசோதரியை, மகளை  பார்ப்பனர்களுக்கு  “ தேவடியாள் ” என்பதை உறுதி செய்ததைத் தவிர வேறு என்ன செய்து சாதித்தார்கள் புலவர்களும், பண்டிதர்களும், வித்துவான்களும் ?
பெரியாருக்கு முன்னே யாருமே இல்லையா ? திராவிடர் இயக்கம்தான் சாதித்ததா ?
‘ தமிழ் தேசியம் ’ பேரிரைச்சலாய்க் கேட்கிறது.
முன்னே பலர் விதைத்தார்கள்; பெரியாரும், திராவிடர் இயக்கமும் அறுத்துக்கொண்டது என்று ‘தமிழ் தேசியம் ’ ரொம்பவும் கோபமாகச் சொல்கிறது.
பெரியாருக்கு முன்னே பலர் இருந்தார்கள்தான், விதைத்தார்கள்தான்.
இல்லை என்று பெரியாரும் சொல்லவில்லை,
திராவிடர் இயக்கம் மட்டுமே என்று உரிமையும் கோரவில்லை !
அவர்கள் மண்ணில் விதைத்தார்கள். ஆனால், 
தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க முடியவில்லை  !
காரணம் அவர்கள் யாரும் இயக்கமாக இல்லை. எனவே அவர்களால் இயங்க முடிய வில்லை. அவர்கள் விதைத்துவிட்டு
‘கடை விரித்தேன் கொள்வாரில்லை ’ என்று முடித்துக் கொண்டவர்கள் !
பெரியார் விதைத்தார்.  அவர் மண்ணில் விதைக்கவில்லை.
பெரியார் விதைத்தார், அவர் மக்களுக்குள் விதைத்தார்.
அதனால்தான் அவரால் இயக்கமாகக் கட்டமைக்க முடிந்தது.
எது, எதுவெல்லாம் நேர் என்று சொல்லப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு பொதுபுத்தி யில் ஏற்றப்பட்டதோ – அவற்றிற்கு எதிராகக் கலக்குரல் எழுப்பி அவற்றைக் கட்டுடைத் தார். எனவேதான் அவரால் புதிதாக இயக்கம் கட்டமைக்க முடிந்தது. மனிதர்களுக்கா வென்றே பெரியாரால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம்.
அதனுடைய நீட்சிதான் தற்போது  ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற திராவிடர் இயக்கம் என்று வேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள்.
இவர்கள் சொல்கின்றார்கள், “ பெரியார் பேசியது எதிர்வினைக் கருத்துகள். எதிராகப் பேசினார், எதிராக செயல்பட்டார். அவருக்கான நேர்வகைக் கருத்தியலை அவர் உருவாக்கவில்லை “ என்று.  இந்தத் தமிழ்தேசியர்கள் எதையெல்லாம் எதிர்வினைக் கருத்துகள் என்கின்றார்களோ அதுவெல்லாம்தான் தமிழ்ச் சமூகத்திற்கான நேரான கருத்தாக்கங்கள். அதைத்தான் சென்ற பத்தியில் சொன்னேன், எதுவெல்லாம் இந்த சமூகத்திற்கு எதிரானதோ அவற்றையெல்லாம் நேர் என்று சொல்லி பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டது. அதைத்தான் பெரியார் கட்டுடைத்தார்.
பெரியார் குறித்த இந்த ஒவ்வாமை ஒன்றும் இன்றைக்குப் புதிதாய் ஏற்பட்டதல்ல. தலைவர் தந்தை பெரியார் வாழ்ந்த – அவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அவரும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல பல சந்தர்ப்பங்களில் நிறைய பதில் சொல்லியுள்ளார். அவற்றையெல்லாம் தொடர்ந்து இந்த கட்டுரையிலே மீள்பதிவு செய்கின்றேன்.
ஆம் , இது ஒரு தொடர் கட்டுரை.
இப்போதைக்கு இதனை தொடரும் என்று முடிக்கின்றேன். முடிக்கும் முன்பாக இதனைப் படிக்கும் தோழர்களுக்கு ,
இந்தக் கட்டுரையினை படித்ததன் அடிப்படையில் - நியாயமான மூன்று கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்க வாய்ப்புள்ளது.
தமிழ்தேசிய ‘ தம்ளர்கள் ’ வரிக்குவரிகூட கேள்விகள் கேட்கலாம். அந்த புத்திசாலி களுக்குப் பதில் சொல்லும் சிற்றறிவும், பேரறிவும் என்னிடம் இல்லை.
அந்த மூன்று கேள்விகளை பதிவு செய்யுங்கள். பதில்களோடு கட்டுரையினை அடுத்து தொடர்கிறேன்.
தோழமையுடன்,
பசு.கவுதமன்.
                                 அய்யாவுடன் நானும் என் இளைய சகோதரி மாதரியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக